2024 தேர்தலில் பெரும் திருப்பம்.! மே.வங்க முதல்வர் மம்தா.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நேற்றைய கூட்டத்தில் பேசியுள்ளார்.
ராகுல்காந்தியின் எம்பி பதவி மீதான தகுதிநீக்க நடவடிக்கையானது தற்போது காங்கிரஸ் கட்சியை தாண்டி நாட்டில் உள்ள எதிர்கட்சிகளின் ஒன்றிணைத்து வருகிறது என்றே கூறலாம். நாட்டில் பல்வேறு கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் இருந்து தள்ளியே இருந்தார். தான் தனித்து பாஜகவை எதிர்கொள்ளும் மனநிலையில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மம்தா பேனர்ஜி, பாஜகவை வீழ்த்த அனைத்த்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க.வுக்கு எதிராக போராட வேண்டும் என்றும், கெட்டவர்களை ஒழித்து நாட்டைக் காப்பாற்றுங்கள். துரியோதனனை அகற்றி ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள், ஏழைகளைக் காப்பாற்றுங்கள் எனவும் அந்த நிகழ்வில் பேசினார்.
அடுத்ததாக அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் முக்கிய இலக்காக மாறிவிட்டனர். குற்ற பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதற்க்கு தகுதியற்றவர்களாக மாறிவிட்டதாக கூறுகிறார்கள். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் ஒரு புதிய வீழ்ச்சியைக் கண்டுள்ளோம். என்றும் பாஜக மீதான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் மம்தா பேனர்ஜி.