தொழிற்சங்கத்துடன் பிரதமர் அடுத்த வாரம் நேரில் பேசுவார்.

Kumarathasan Karthigesu

3ஆம் தரப்பு மத்தியஸ்தம் அரசு மறுத்து நிராகரிப்பு.

அரசமைப்புக் கவுன்சிலின் தீர்ப்பு ஏப்.14 இல் அறிவிப்பு.

பிரான்ஸின் சர்ச்சைக்குரிய ஓய்வூதியச் சட்டம் மீதான அரசமைப்புக் கவுன்சிலின்(Conseil constitutionnel) தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கவுன்சிலின் தீர்ப்பு இரண்டு முக்கிய முடிவுகளைக் கொண்டிருக்கும். ஓய்வூதிய வயதை 62 இல் இருந்து 64 ஆக அதிகரிக்கின்ற சட்டத் திருத்தம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை அடியொற்றிச் செல்கிறதா என்பது முதலாவது. இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களது கோரிக்கையின் படி ஓய்வூதியச் சீர்திருத்தம் மீது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு(Referendum) நடத்தப்பட வேண்டுமா என்பதையும் கவுன்சிலின் தீர்ப்பு முடிவு செய்யும்.

அது இரண்டாவது. ஓய்வூதியச் சட்டப் பிரேரணை கடந்த 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேறியமை தெரிந்ததே.

பிரதமர் எலிசபெத் போர்னின் அரசு பிரேரணை மீது வாக்களிப்பைத் தவிர்த்துவிட்டு அரசமைப்பின் 49 ஆவது ஷரத்தின் மூன்றாவது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனைச் சட்டமாக்கியிருந்தது. அதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில் அரசு தப்பிப் பிழைத்தது.

ஓய்வூதியத் திருத்தச் சட்டம் தற்போது சட்டமாக நிறைவேறியுள்ள போதிலும் அதனை நாட்டின் அரசமைப்பு அதிகார சபையாகிய அரசமைப்புக் கவுன்சில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

நாட்டின் அரசமைப்புக்கு முரணானது என்று கருதப்படுமிடத்து சட்டத்தின் சில பிரிவுகளைப் பகுதியாகவோ அல்லது சட்டத்தை முழுமையாகவோ நிராகரிக்கின்ற உயர் அதிகாரம் அரசமைப்புக் கவுன்சிலுக்கு உள்ளது.

நாடெங்கும் கொழுந்துவிட்டு எரியும் கடும் மக்கள் உணர்வலைக்கு நடுவே முக்கியமான ஒரு சட்டம் மீது அரசமைப்புச் சபை வழங்கப் போகின்ற தீர்ப்பு எவ்வாறு அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சகலரிடமும் தீவிரமாக உள்ளது.

இதேவேளை, அரசமைப்புக் கவுன்சிலின் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பாகத் தொழிற்சங்கங்களை மீண்டும் பேச்சுக்கு அழைப்பதற்குப் பிரதமர் எலிசபெத் போர்ன் முடிவு செய்துள்ளார். அடுத்த வாரத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத் திருத்தச் சட்ட விவகாரத்தில் தொழிற்சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையே நடைபெறவிருக்கின்ற பேச்சுக்களில் மூன்றாவது தரப்பு ஒன்று நடுநிலை வகிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசுத்தரப்பு நிராகரித்து விட்டது.

சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து நடைமுறைப் படுத்துவதில் மக்ரோன் அரசு மிகத் திடமாக உள்ளது. மறுபுறத்தில் தொழிற்சங்கங்களோ ஓய்வூதிய வயதை 64 ஆக அதிகரிப்பதை ஏற்க முடியாது என்றவாறு கடும் போக்கைக் கொண்டுள்ளன. சட்டத் திருத்தத்தை மக்ரோன் வாபஸ் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இன்னமும் தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் இருக்கின்றனர். இந்த நிலையில் பேச்சுக்கள் எந்த அடிப்படையில், எது குறித்து எவ்வாறு தொடங்கப்படும் என்பதில் தெளிவற்ற நிலைமையே காணப்படுகிறது.

இதேவேளை, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அடுத்த கட்ட எதிர்ப்பு நாளாக ஏப்ரல் 6ஆம் திகதியை அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடந்த பத்தாவது கட்ட வேலை நிறுத்தம் மற்றும் பேரணிகளில் மக்களின் அணி திரள்வு வீழ்ச்சியைக் க் காட்டியுள்ளது. மாறாக பல நகரங்களிலும் பொலீஸார் மற்றும் வன்முறைக் குழுக்கள் இடையே வீதி மோதல்களே அதிகரித்துக் காணப்பட்டன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">