ஈஸ்டர் தாக்குதல் – புலஸ்தினி மகேந்திரன் உயிரிழப்பு உறுதி!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்று சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் உயிரிழந்தவர்களில் சாரா ஜஸ்மினும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனும் அடங்குவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது முறையாக பெறப்பட்ட நுண்ணிய மாதிரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் டிஎன்ஏ மாதிரிகள் மற்றும் புலஸ்தினி மகேந்திரனின் தாயாரிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உயிரியல் உறவை உறுதிப்படுத்தியதன் பெறுபேறு எனவும், இது நூற்றுக்கு 99.99 வீதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.