ராகுல் காந்தி நாடாளுமன்ற வருகை: லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஏப்ரல் 3ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைப்பு.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு தொடங்கிய நாள் முதலே லோக்சபா, ராஜ்யசபா தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக, இன்றும் அமளி ஏற்பட்டதால் ஏப்ரல் 3ஆம் தேதி, காலை 11 மணி வரை மக்களவையை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், கடந்த 12 நாட்களாக இரு அவைகளும் முடங்கியுள்ளது. இந்த அமளிகளுக்கு நடுவே, ஒரு சில மசோதாக்களை மத்திய அரசு இரு அவைகளிலும் நிறைவேற்றி வருகிறது. முன்னதாக, இன்று காலை மத்திய பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட, ராகுல் காந்தியும் பங்கேற்றார். இந்நிலையில், தகுதி நீக்கத்துக்குப் பின்னர் நாடாளுமன்றத்துக்கு ராகுல் காந்தி வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.