வலுவான யுத்தத்துக்கு தயாராக இருங்கள்’ -பிரதமர் மோடி.
பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் அமைச்சர்கள், பாஜக எம்பிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அண்மையில் நடந்து முடிந்த நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மோடிக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும்,நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் 11 ஆவது நாளாக முடங்கிய நிலையில் பேசிய பிரதமர் மோடி, ‘பாஜக எவ்வளவு வெற்றிகள் பெறுகிறதோ அவ்வளவு எதிர்ப்புகள் வரும் என்பதால் வலுவான யுத்தத்துக்கு தயாராக இருங்கள்’ என்றார்.
மேலும் ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, பாஜக எம்பிகள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். வரும் மே 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதிக்குள் இந்த பரப்புரையை மேற்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.