அரசாங்கம் வன்முறைக்கு அடிபணியாது!

Kumarathasan Karthigesu

அரசமைப்புச் சபையின் தீர்ப்பு வெளியான பிறகு சங்கங்களுடன் பேசலாம் மக்ரோன் தெரிவிப்பு.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அளவுமீறி பலப்பிரயோகம் பிரான்ஸ் மீது கண்டனம்.

ஓய்வூதியச் சட்டம் ஜனநாயக செயல் முறைகளில் தொடர்ந்து முன்னோக்கிப்பயணிக்கும் என்று மீண்டும் உறுதியாகக் கூறியிருக்கிறார் மக்ரோன். “வன்முறைக்கு நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம். வன்முறையை நான் தீவிரமாகக்கண்டிக்கிறேன்” – என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் இன்று வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பிரான்ஸின் நிலைவரம் தொடர்பான செய்தியாளர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஓய்வூதியச் சட்டம் தற்போது நாட்டின் அரசமைப்புச் சபையின் (Constitutional Council) பரிசீலனையில் உள்ளது. அதன் முடிவுக்காக நாங்கள் பொறுத்திருப்போம். அதன்பிறகு தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறோம்- என்று மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தின் மன்னர் சார்ள்ஸின் பாரிஸ் விஜயம் தடைப்பட்டிருப்பது தொடர்பாகவும் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

“மாட்சிமை தங்கிய மன்னர் மற்றும் ராணியார் ஆகியோரை ஆர்ப்பாட்டங்களுக்கு நடுவே அழைப்பதற்கு நாங்கள் ஒன்றும் அக்கறையோ அல்லது பொதுவான அறிவோ அற்றவர்கள் அல்லர் என்று நினைக்கிறேன்.”

-இவ்வாறு மக்ரோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மன்னரது விஜயம் கோடை விடுமுறைக்காலத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் என்றும் அங்கு அவர் கூறினார்.

இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் மீது அதிகப்படியான பலப்பிரயோகத்தைச் செய்ய வேண்டாம் என்று ஐரோப்பிய மனித உரிமைகள் சபை பாரிஸ் அரசிடம் கேட்டிருக்கிறது. பிரான்ஸின் நிலைவரம் தொடர்பாக ஐரோப்பியக் கவுன்சிலின்(Council of Europe) மனித உரிமைகளுக்கான ஆணையாளர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் –

ஆர்ப்பாட்டங்களின் இடையே ஆங்காங்கே இடம்பெறுகின்ற சிலரது வன்செயல்களுக்காக அமைதியான வழி முறைகளில் அணி திரள்கின்ற மக்களது ஒன்று கூடும் சுதந்திரம் மீது அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம் செய்வதை நியாயப்படுத்த முற்பட வேண்டாம் – என்று கேட்டிருக்கிறார்.