லண்டன் பெண்கள் அமைப்பு நடத்திய சர்வதேச பெண்கள் தினம்!

ஆண்டுதோறும் உலகளாவிய பெண்கள் தினம் மார்ச் எட்டாம் திகதி பரவலாக நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வருடமும் ‘’DigitALL: Innovation and technology for gender equality’’ எனும் கருத்துக்கமைய இத்தினம் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. புதிய கண்டு பிடிப்புகளும் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் எந்தவிதப் பாலின வேறுபாடுகளுமின்றி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமென்பதில் அனைவரும் ஆர்வம் காட்டியிருந்தனர். இதனை மையப்படுத்தியே ‘இலண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பு’ 11.03.2023 அன்று இலண்டன் தமிழ் நிலையம் 253 East lane, Wembley எனும் முகவரியில் காலை 10.00 மணியளவில் இந்நிகழ்வைக் கொண்டாடினர். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இவ்விழாவில் அவர்களிடையே மனந்திறந்த உரையாடல்களும் பங்களிப்பும் இடம்பெற்றமை மனமகிழ்ச்சியைத் தந்தது.

ஆரம்பத்திலேயே அமைப்பு உறுப்பினர்கள், சிற்றுண்டியும் தேனீரும் வழங்கி வருவோரை உபசரித்தனர். பின்னர் ‘’வாழிய இலண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பு’’ எனத் தொடங்கும் மன்றக்கீதத்துடன் அகவணக்கமும் இடம்பெற்றது. நிகழ்வுகளைத் தலைமை தாங்கி நடாத்திய இலண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் தலைவி மாதவி சிவலீலன் அனைவரையும் வரவேற்றதுடன் தலைமையுரையையும் வழங்கினார். இலண்டனில் வாழும் தமிழ்ப் பெண்கள் யாவரும் ஒன்றிணைய வேண்டும்; தங்களுக்கிடையேயிருக்கும் ஆற்றல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்; கருத்தரங்குகள், உரையாடல்கள், விவாதங்கள், இலக்கிய வாசிப்புக்கள் மூலம் பெண்களுக்கான அறிவூட்டலை வழங்க வேண்டும்; உலகெங்கும் ஒடுக்கப்படும் பெண்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் போன்ற அமைப்பின் குறிக்கோள்களை நினைவுபடுத்திப் பேசிய அவர், கடந்த ஆறு வருடங்களாக இந்த அமைப்பு சிறப்பாக இயங்கி வருவதையும் கூறினார்.

தொடர்ந்து ‘’பெண்களின் உலகம்’’ எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்துக் களம் நிகழ்வை கௌரி சிறீநாதன் தலைமை தாங்கி நடத்தினார். ஆற்றல் மிகுந்த பெண்கள், தாம் இருக்கும் துறைகளில் சந்தித்த சவால்களையும் முன்னெடுப்புக்களையும் சபையினரோடு பகிர்ந்து கொண்டனர். ஊடகப் பணிப்பாளராக விளங்கும் வேணி சதீக்ஷ், இத்துறைக்கு வந்த ஆரம்ப கால அனுபவங்களைக் கூறினார். சட்டத்தரணி பிரேமலதா சேந்தன், ஆதிகால தாய்வழிச் சமுதாய அமைப்புப் பற்றி விளக்கி, இன்று சட்டத்துறையில் பெண்களுக்கு இருக்கும் சலுகைகள் பற்றியும் சொன்னார். ஆங்கிலமொழி எழுத்தாளரான ரம்யா ஜெகதீசன் குறிப்பிடுகையில், தான் எவ்வாறு இத்துறைக்கு வந்தேன் என்பதனையும், ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம் தனக்குத் தேவையென்பதனையும் கூறினார். மூத்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தனது உரையில், இலண்டனுக்கு வந்த ஆரம்ப காலத்தில் இலக்கியத்துக்கும் அரசியலுக்கும், பெண்ணுரிமைக்கும் தான் எத்தகைய பங்களிப்பை வழங்கினாரென்பதை நகைச்சுவையுணர்வுடன் எடுத்துரைத்தார். இதனூடாக இளம் எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்கள் பற்றி அறியவும் அவர்களுடன் உரையாடி ஒருவருக்கொருவர் தங்களது செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடவும் நல்லதொரு சந்தர்ப்பமாக இச்சந்திப்பு அமைந்தது, எல்லோராலும் பாராட்டப்பட்டது.

அடுத்த நிகழ்வாக இளையோர் அரங்க்கில் ‘’பணிச்சுமை திருமண வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது’’ எனும் தலைப்பில் உரைகள் இடம்பெற்றன. காயத்ரீ சிறீகரன் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கில் இளம்பெண் பிள்ளைகள் பங்குபற்றித் தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைத்தனர். கங்காதேவி குமாரலிங்கம், அர்ச்சனா இலங்கைநாதன், அபிராமி ஜெயசீலன், ஆரணி நித்தியலிங்கம் ஆகியோர் ஆற்றிய உரையும் அதனை அவர்கள் விதந்துரைத்த பாங்கும் எல்லோர் மனங்களையும் கவர்ந்திருந்தது.

கடந்த வருடங்கள் போன்று இந்த வருடமும் மூத்தோர் நடனம் நடைபெற்று சபையைக் கலகலப்பாக வைத்திருந்தது. கலைநயத்துடன் அபிநயம் பிடித்து காஞ்சனா புவனேந்திரன், தங்கலக்ஷ்மி தர்மபாலசிங்கம், பத்மா சிறீகாந்தலிங்கம் ஆகியோர் நடனம் ஆடிய போது அனைவரும் கரகோசம் செய்து அவர்களுக்கு உற்சாகமூட்டினர். அதே போன்று ஜெசிக்கா நித்தியானந்தன் இரு பாடல்களை இனிமையாகப் பாடிச் சபையை மகிழ்ச்சிப்படுத்தினார்.

மதிய இடைவேளையின் பின்னர், இலண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் வெளியிடப்படும் பெண்மொழி இதழ் பற்றிய கருத்துக்களை ரஜித்தா சாம் முன்வைத்தார். அதில் இடம்பெற்ற கவிதைகள், சிறுகதை, விமர்சனக் கட்டுரை பற்றிக் குறிப்பிட்டதுடன் ஆசிரியர் தலையங்கம், இதழ் அமைப்பு என்பன பற்றியும் பாராட்டியுரைத்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்த ஈழத்து எழுத்தாளர் தமிழ்க்கவி அவர்களின் உரை மிகவும் காத்திரமானதாகவும் சபையைச் சிரிக்க வைத்ததாகவும் இருந்தது. ஈழத்தில் போராட்ட காலத்திலும் அதன் பின்னரும் பெண்களின் சுதந்திரம் இயல்பாக எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வந்ததென்பது பற்றிய அவரது பார்வை அவரது கூரிய சமூகப்பார்வையை விளக்குவதாக அமைந்திருந்தது. பின்னர் அவருக்கு பூங்கொத்துக் கொடுத்து அமைப்பு உறுப்பினர்கள் கௌரவித்தனர்.

நிறைவு நிகழ்வாக நூல்களின் அறிமுகம் இடம்பெற்றது. நவஜோதி யோகரட்னம் தலைமையில் கவிதாலக்ஷ்மியின் சிகண்டி கவிதை நூலை ரஜித்தா சாமும், சிறீரஞ்சனியின் ஒன்றேவேறே சிறுகதை நூலை கௌரி பராவும் தமிழ்க்கவியின் நரையன் சிறுகதை நூலை மீனாள் நித்தியானந்தனும் மாலதியின் தமிழ்ப் பெண் பொதுவெளி கட்டுரை நூலை அகல்யா நித்தியலிங்கமும், விசயலக்ஷ்மியின் மொழியாக்கமான லண்டாய் நூலை மாதவி சிவலீலனும் அறிமுகம் செய்தனர். மிகவும் சிறப்பான இந்நூல்கள் பற்றிய வாசிப்புத் தனி நிகழ்வாக நடத்தப்பட வேண்டுமென்ற கருத்து பார்வையாளர்களால் முன் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அனைத்து நிகழ்ச்சிகளையும் சபை நிலை குலையாமல் இருந்து கண்டு களித்தமை வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தது. அத்துடன் அமைப்பு வழங்கிய அறுசுவையுடன் கூடிய மதிய உணவையும், உபசரிப்பையும் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் புலப் பெயர்ந்த சூழலில் மூன்று தலைமுறைப் பெண்களும் கலந்து கொண்டு தங்களது ஆளுமைகளை வெளிப்படுத்தியமை, உண்மையிலேயே நல்லதொரு விடயமாகப் பார்க்கப்பட்டது.