இலங்கைக்கு நிதி வழங்கிய சர்வதேச நாணய நிதியம், தமிழர் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமை பற்றி ஹரி ஆனந்தசங்கரி அதிருப்தி.


இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதியுதவி அளித்துள்ள நிலையில், இலங்கை நிறைவேற்ற வேண்டிய சில நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளது.  இந்நிலையில், கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இந்த உதவி செயற்திட்ட இணக்கப்பாடு தொடர்வதற்கு இலங்கை பல்வேறு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவேண்டியுள்ளது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாமை எம்மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வு வழங்கப்படுவதுடன், வடக்கு – கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையும், பொருளாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்களைத் தீர்மானிப்பதற்கான அதிகாரமும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.