காதல் திருமணத்திற்கு எதிர்ப்பான ஆணவக்கொலைக் குற்றங்களுக்கு எதிராக தனிச்சட்டமியற்ற வேண்டும்: சீமான் தெரிவிப்பு.


காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் ஆணவக்கொலைக் குற்றங்களுக்கு எதிராக தனிச்சட்டமியற்ற வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக பெண்ணின் வீட்டாரால் ஜெகன் எனும் இளைஞர் நடுச்சாலையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சி தருகிறது.

நாகரிகம் பெற்று குடிமைச்சமூகமாக வாழ்ந்து வரும் தற்காலத்திலும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பென்ற பெயரில் அரங்கேற்றப்படும் ஆணவப்படுகொலைகள் ஒட்டுமொத்தசமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது. ஜெகனும், அவரது இணையரான சரண்யாவும் உறவினர்கள் என்றபோதிலும், காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட இப்பச்சைப்படுகொலையை ஒருநாளும் சகிக்க முடியாது. மனித மனங்கள் ஒன்றுபட்டு, மனமொத்து செய்கிற திருமணத்திற்கு சாதி, மதம், வர்க்கம் என எந்தவொரு காரணியைக் காட்டியும் எதிர்ப்புத் தெரிவிப்பதென்பது மனிதத்தன்மையே அற்ற கொடுஞ்செயலாகும்.

அதனை வன்மையாக எதிர்க்கிறேன். ஆகவே, தம்பி ஜெகனைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்படும் ஆணவக்கொலைக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச்சட்டமியற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்’ என்ற அவர் கூறியுள்ளார்.