மரியுபோல் நகரில் கார் ஓட்டிச் சென்றார் அதிபர் புடின்!
Kumarathasan Karthigesu
போர்ப் பகுதிக்கு திடீரென விஜயம்.
ரஷ்யா உக்ரைனின் கிறீமியாக் குடாவை ஆக்கிரமித்துத் தன்னோடு இணைத்து ஒன்பது ஆண்டுகள் நிறைவுறும் நாளில் அதிபர் விளாடிமிர் புடின் நேற்று சனிக்கிழமை அங்கு நேரடியாக விஜயம் செய்தார்.
அதனை முடித்துக் கொண்டு அவர் அங்கிருந்து ரகசியமாக அன்றிரவு உக்ரைனின் மரியுபோல் நகரத்துக்கு எதிர்பாராத திடீர்ப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கிரெம்ளின் மாளிகை இதனை உறுதி செய்தது.
குண்டு வீச்சுக்களால் அழிவுண்ட அந்த நகரத்தின் வீதி ஒன்றில் புடின் தனது காரைச் செலுத்திச் செல்கின்ற வீடியோ படங்கள் வெளியாகியுள்ளன.
கிறீமியாவில் இருந்து ஹெலிக்கொப்டரில் மரியுபோல் வந்தடைந்த அவர் பின்னர் கார் ஒன்றில் சென்று நகர வீதிகளில் இரவு நேரம் மக்களைச் சந்தித்தார் என்று அறிவிக்கப்படுகிறது. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய பிறகு புடின் போர்ப் பிரதேசம் ஒன்றுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை ஆகும்.
உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மரியுபோல் நகரம் நீண்ட கொடும் சமர்களுக்கு பின்னர் கடந்த மே மாதம் ரஷ்யப்படைகளிடம் வீழ்ந்தது. அங்கு நடந்த போர் பல லட்சம் மக்கள் வாழ்ந்த அந்த நகரத்தைச் சுடுகாடாக மாற்றியிருந்தது. ஆயிரக்கணக்கில் சிவிலியன்கள் உயிரிழந்தனர். பல புதைகுழிகளில் இருந்து பெரும் எண்ணிக்கையான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான சிவிலியன்கள் தஞ்சமடைந்திருந்த மரியுபோல் நாடக அரங்கம் (Mariupol theatre) மீது ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை ஒரு போர்க் குற்றமாக ஐ. நா. பதிவுசெய்துள்ளது.
ஆக்கிரமித்த உக்ரைன் நகரில் புடின்கால் பதித்திருப்பது குறித்து, அந்த நகரத்தின் முன்னாள் முதல்வர் பிபிசிக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “புடின் ஒரு குற்றவாளி. குற்றங்கள் புரிந்த களத்துக்கு அவர் திரும்பி வந்துள்ளார்” – என்று தெரிவித்தார். அதேசமயம் “புடின் ஒரு திருடனைப் போன்று இரவில் வந்து திரும்பியுள்ளார்” என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிபர் புடினின் இந்த உக்ரைன் விஜயம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவர் மீது போர்க்குற்றம் சுமத்திச் சர்வதேச கைது ஆணை ஒன்றைப் பிறப்பித்த சில தினங்களில் நிகழ்ந்திருக்கிறது.
புடின் மீதான கைது ஆணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்புரிமை வகிக்கின்ற நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்வதைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
தென்னாபிரிக்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள “பிறிக்ஸ்” (BRICS) நாடுகளது உச்சி மாநாட்டில் புடின் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் தென்னாபிரிக்க அதிபர் சிறில் ரமபோசாவின் (Cyril Ramaphosa) பேச்சாளர் ஒருவர், “புடினின் வருகை தொடர்பான தனது சட்டக் கடப்பாடுகளை தென்னாபிரிக்கா அறிந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டிக்காத நாடுகளில் ஒன்றான தென்னாபிரிக்காவுக்கு , புடினின் விஜயம் சிக்கலான ஒரு இக்கட்டை ஏற்படுத்தலாம்.