13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் : சம்பந்தன் வலியுறுத்தல்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இலங்கைக்கான கனேடியத் தூதுவர் மற்றும் இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் வீட்டுக்கு நேற்றுசென்ற இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ், சம்பந்தனுடன் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார். அதையடுத்து மாலை சென்ற இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபன்ஸும் சம்பந்தனுடன் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
இரு நாட்டுத் தூதுவர்களுடான சந்திப்பு தொடர்பில் இரா. சம்பந்தன் கருத்து தெரிவித்தார். இலங்கைக்கான புதிய கனேடியத் தூதுவருடனும் புதிய ஆஸ்திரேலியத் தூதுவருடனுமான இந்தசந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது எனக் குறிப்பிட்டர்.
இன்றைய அரசியல் நிலைமை, அரசியல் தீர்வு சம்பந்தமான நிலைமை, பொருளாதார நெருக்கடி நிலைமை, நாட்டைவிட்டுப் பெருமளவிலான மக்கள் வெளியேறும் நிலைமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.