சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் முயற்சி.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் முயற்சியை சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்களை சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் அபகரித்து வரும் நிலையிலேயே நெடுந்தீவிலும் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நெடுந்தீவு தமிழர்களுடைய வரலாற்றை பறைசாற்றும் தலைசிறந்த சுற்றுலாத்தளமாக காணப்படும் நிலையில் அங்கு திட்டமிட்டு பௌத்தமயமாக்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், கோட்டை மற்றும் மாவிலி இறங்குதுறைப் பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதி இன்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் விளம்பர பலகையும் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டப்பட்டுள்ள பதாதையை அகற்றி கோட்டையின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் பேண உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நெடுந்தீவிலும் இவ்வாறான சம்பவம் தற்போது இடம்பெற்றுள்ளது.