பாரிஸ் தெருக்களில் தொன் கணக்கில் கழிவுகள் தேக்கம்.
Kumarathasan Karthigesu
தொழிலாளர் போராட்டம் அகற்றும் பணி நிறுத்தம் நகரில் சுகாதாரச் சீர்கேடு.
ஓய்வூதியச் சீர்திருத்தத்துக்கு எதிரான வேலை நிறுத்தத்தால் பாரிஸ் நகரின் குப்பைக் கழிவு அகற்றும் பணிகள் கடந்த ஐந்து, ஆறு நாட்களாகத் தடைப் பட்டிருக்கின்றன. இதனால் நகர வீதிகளில் தொன் கணக்கில் கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன.
ஐயாயிரம் தொன்களுக்கும் அதிகமான கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளன என்று மாநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் சில தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.நடைபாதைப் பயணத்துக்கும் பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது.
பாரிஸ் நகரில் குடியிருப்பாளர்களால் தினமும் வெளியேற்றப்படுகின்ற கழிவுகள் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு கழிவு தரம்பிரிக்கும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அவ்வாறு கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுகின்ற
மாநகரத் தொழிலாளர்களின் தொழிற் சங்கமும் தற்போதைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைந்துள்ளது. அதனால் கழிவு அகற்றும் பணியாளர்களில் சுமார் அறுபது வீதமானோர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நகரின் வீதி ஓரங்கள் குப்பைக் கொள்கலன்களால் நிறைந்து காணப்படுகின்றன. கொள்கலன்கள் நிறைந்து வழிகின்றன. வெளியே தரையெங்கும் கழிவுப் பொதிகள் குவிக்கப்பட்டு வருகின்றன. கடும் காற்றின் காரணமாகக் குப்பைகள் வீதிகள் எங்கும் பறந்து சிதறுண்டு காணப்படுகின்றன.
ஓய்வுபெறுகின்ற வயதை 64 ஆக அதிகரிப்பது உட்பட சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்படுவதற்கு எதிரான போராட்டங்கள் நாடெங்கும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேற்று சனிக் கிழமை நடைபெற்ற பேரணிகளில் இதற்கு முன்னர் போலன்றி மக்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. தற்சமயம் நிலவிவருகின்ற குளிர் காற்றுடன் கூடிய மழைக் காலநிலையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற விவாதங்களுக்குப் பின்னர் புதிய ஓய்வூதியச் சட்ட நகலை நாட்டின் செனற் சபை உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டு வாக்களித்துள்ளனர்.
அது அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இறுதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதனால் தொழிற்சங்கங்கள் சீற்றமடைந்துள்ளன. பரபரப்பான நிலைமை தோன்றியுள்ளது.