படகு அகதிகளுக்காக பிரான்ஸில் தடுப்பு முகாம் நிறுவுவதற்கு லண்டன் நிதி!

Kumarathasan Karthigesu

பாரிஸ் வந்தார் ரிஷி சுனாக் இரு தரப்பு உறவில் திருப்பம்.

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சிக்கின்ற படகு அகதிகள் விவகாரத்தைக் கையாள்வதில் மிக நெருக்கமாகச் செயற்படுவதற்கு பாரிஸும் லண்டனும் தயாராகின்றன.

 

இது தொடர்பான இருநாடுகளது முயற்சிகள் அடங்கிய திட்டம் இன்று பாரிஸில் அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து இங்கிலாந்து செல்ல முயற்சிக்கின்ற வெளிநாட்டுக் குடியேறிகளை முற்றாகத் தடுத்து நிறுத்த லண்டன் முடிவு செய்துள்ளது. பிரான்ஸுக்கு நிதி உதவி அளித்துக் குடியேறிகளைத் தடுப்பதற்கான புதிய உடன்பாட்டுத் திட்டத்தை பிரதமர் ரிஷி சுனாக் இன்று பாரிஸில் வைத்து வெளியிட்டிருக்கிறார்.

அதன் ஒரு செயற்பாடாக ஆங்கிலக் கால்வாய் அகதிகளுக்கான புதிய தடுப்பு முகாம் (detention center) ஒன்றை பிரான்ஸின் வட பகுதியில் நிறுவுவது உட்படத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக லண்டன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 541 மில்லியன் ஈரோக்களை($575 million)பாரிஸுக்கு வழங்கவுள்ளது.

இரு நாடுகளின் எல்லை மற்றும் கரையோரக் காவல் படைக் கட்டளை மையம் (new command center) ஒன்றை நிறுவுவதும், ட்ரோன்(drones) உட்பட நவீன தொழில்நுட்ப முறைகளில் படகு அகதிகளைக் கடலில் கண்காணித்துத் தடுப்பதும் புதிய உடன்படிக்கையில் அடங்கியுள்ளன.

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் இன்று பாரிஸ் வந்து அதிபர் மக்ரோனுடன் முக்கிய இரு தரப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்றிருக்கிறார். ஈரோஸ்ரார் ரயிலில் பாரிஸ் வந்தடைந்த சுனாக், எலிஸே மாளிகை சென்று அதிபர் மக்ரோனுடன் முக்கியமான அரசியல் கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்று அறிவிக்கப்படுகிறது.

ரிஷி சுனாக்குடனான சந்திப்பிற்குப் பிறகு கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பேசிய மக்ரோன், “இது ஒரு புதிய ஆரம்பம்(“new start”) என்றார்.

பிரிட்டிஷ் – பிரான்ஸ் உறவுகள் கடந்த காலங்களில் சில சமயம் விளையாட்டு போட்டிகளின் போது துண்டிக்கப்பட்டிருப்பினும் – பிரான்ஸ் கடந்த உலகக் கிண்ணத்தின்போது இங்கிலாந்தை வீழ்த்தியிருப்பினும் – வரலாறு இரு நாடுகளையும் எப்போதும் இணைத்தே வைத்துள்ளது – என்று அவர் அப்போது தெரிவித்தார்.

சமீப ஆண்டுகளில் இரு நாட்டு உறவுகளில் பல்வேறு சவால்கள் இருந்ததைக் குறிப்பிட்ட ரிஷி சுனாக், அதேநேரம் இன்றைய சந்திப்பு “ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது., இது ஒரு புது முயற்சி” என்று நம்பிக்கை வெளியிட்டார்.

ஆபிரிக்கா உட்பட வெளி நாட்டுகளைச் சேர்ந்த குடியேறிகள் பிரான்ஸ் ஊடாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து படகுகள் மூலம் இங்கிலாந்து நோக்கிப் படையெடுத்துச் செல்வது சமீப ஆண்டுகளாக இரு நாடுகளிடையேயும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விவகாரமாக இருந்து வருகிறது.

படகுகள் உட்பட சட்டவிரோதமான வழிமுறைகளில் நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களுக்குப் புகலிடம் வழங்குவதை நிறுத்துதல்,28 நாட்களுக்குள் அவர்களைச் சொந்த நாட்டுக்கு அல்லது மூன்றாவது நாடு (றுவாண்டா) ஒன்றுக்குத் திருப்பி அனுப்புவது உட்பட பல்வேறு கடுமையான விதிகள் அடங்கிய புதிய குடியேற்றச் சட்ட மூலத்தை ரிஷி சுனாக்கின் அரசு அண்மையில் வெளியிட்டிருந்தது தெரிந்ததே .

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">