வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது அதிரடி நடவடிக்கை -டிஜிபி
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி பரப்புவோர்களைக் கண்காணிக்க டிஜிபி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது தொடர்பாக சமீபத்தில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, இதனால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர் என்ற செய்தியும் காட்டுத்தீ போல் பரவியது.
இதனையடுத்து சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ மற்றும் செய்தி போலியானது, இது வேறு மாநிலத்தில் நடைபெற்ற பழைய வீடியோ என்றும் தமிழக காவல்துறை விளக்கமளித்திருந்தது, இந்த தவறான தகவல் பரப்பிய இருவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்திருந்தனர். மேலும் தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வரிடம் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து வதந்தி பரப்புபவர்களைக் கண்காணிக்க, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, 5 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், வதந்தி தொடர்பான விவகாரத்திலும், வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்தும் கண்கானிக்க அவினாஷ் குமார், அபிஷேக் தீட்சித், ஹரிஷ் சிங், ஆதர்ஷ் பச்சேரா, மற்றும் ஷுண்முக பிரியா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.