வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

 

வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் வதந்திபரப்பப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், தொழிலாளர்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புஇல்லை, விரட்டி அடிக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இந்த செய்தியில் உண்மை இல்லை என்று அரசு அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. சிறந்த பண்புகளைக் கொண்ட தமிழர்கள் மீது அவதூறு பரப்புவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, வதந்தி பரப்புவோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில், சொந்த மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.