தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு
தேசிய தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 19ஆம் திகதி நடத்த வேண்டும்.தேர்தல் இடம்பெற்றால் மக்கள் வழங்கக்கூடிய மக்களாணையினை கொண்டு பாராளுமன்றத்தில் இருக்கும் தற்போதுள்ள கூட்டம் தொடர்ச்சியாக ஆட்சியதிகாரங்களில் இருக்க முடியாத நிலை தோன்றும். இவ்வாறானதொரு நிலையை உருவாக்குவதற்காகவேனும் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்றுமுன்தினம்நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உயர்நீதிமன்றம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியினை ஒதுக்குவதை அரசாங்கம் தடுக்கக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் அதன் பிரகாரம், உடனடியாக தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.உண்மையில் பாராளுமன்ற தேர்தல் தான் தற்போதைய சூழ்நிலையில் முக்கியமான ஒன்றாகும். காரணம்இ இன்று பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் நீக்கப்பட வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் எதிர்காலத்தில் மக்கள் விரும்பும் நபர்களை நேரடியாக தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலம் ஊழல், மோசடிகள் இடம்பெறுவதை தடுப்பதற்கும், எதிர்காலத்தில் தவறான முடிவுகள் எடுக்கப்படாமல் இருப்பதை தடுத்து நிறுத்தவும் நாம் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். இருப்பினும், நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்றாலும் ஊழல், மோசடிகளில் ஈடுபடாத தரப்பினரை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும். இதேவேளை, தேர்தல் இடம்பெற்றால் மக்கள் வழங்கக்கூடிய மக்களாணையினை கொண்டு பாராளுமன்றத்தில் இருக்கும் தற்போதுள்ளவர்கள் தொடர்ச்சியாக இருக்க முடியாத நிலை தோன்றும். இவ்வாறானதொரு நிலையை உருவாக்கவேனும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். இதற்கு மக்கள் தீவிரமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான தயார்ப்படுத்தலை மக்கள் முன்னெடுக்க வேண்டும். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, தேசிய தேர்தல் ஆணைக்குழு எந்தவிதமான தயக்கங்களும் இல்லாமல் சட்ட ரீதியாக எதிர்வரும் 19ஆம் திகதி தேர்தலை நடத்த வேண்டும். இந்த திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும் என்றார்.