அவள் நாட்டின் பெருமை’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதியின் மகளிர் தின செய்தி

நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், பெண்களின் பெருமை, மரியாதை மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும் ‘அவள் நாட்டின் பெருமை’ என்ற தொனிப்பொருளில் இம்முறை மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில்  மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி  தெரிவித்துள்ளார். இலங்கை சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமான பெண்களின் பிரதிநிதித்துவம், உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் சமூக மேம்பாட்டுக் குறியீட்டிற்குள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எழுத்தறிவில் முன்னணியில் திகழும் இலங்கைப் பெண்கள், இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு தொழில்சார் ரீதியாக வழங்கும் பங்களிப்பும், சக்தியும் விசேடமானது.
இலங்கை பெண்களின் இந்த பல்துறை பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி, திடமான இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணத்தில், இந்நாட்டு பெண்களின் உச்ச பங்களிப்பை பெறவே இலங்கையின் மகளிர் விவகார அமைச்சை தற்காலிகமாக எனது பொறுப்பில் எடுக்கக் காரணமாகும்.நிர்வாக மற்றும் அரசியல் தீர்மானங்களை எடுக்கும் பொறிமுறைக்குள் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், பாராளுமன்றத்தில் மட்டுமன்றி, அரச, தனியார் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க விரிவான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

‘பாலின சமூக, சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல்’ குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையான பணிகள் தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.  நவீன உலகத்தில் பெண்களின் பங்களிப்பை சரியாக புரிந்துகொண்டு, இதில் பங்களிப்புச் செய்யக்கூடிய பெண்களை எமது நாட்டில் வலுவூட்டுவது இந்தப் பணிகளின் நோக்கமாகும்.நாட்டில் வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும், ‘2048 அபிவிருத்தியடைந்த நாட்டை’ உருவாக்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்ய, இந்நாட்டின் அனைத்துப் பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து, இம்முறை சர்வதேச மகளிர் தினத்திற்கான எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.