ஏப்ரல் 25 உள்ளூராட்சி சபைத் தேர்தல்! – ஆணைக்குழு தீர்மானம்
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான புதிய தினமாக ஏப்ரல் 25ஆம் திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஆராய இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் புதிய திகதியை முடிவு செய்தனர்.மார்ச் 9ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.புதிய தேர்தல் திகதி குறித்து மார்ச் 3ஆம் திகதி கூடி முடிவெடுப்பதற்கு ஆணைக்குழு முன்னர் முடிவெடுத்திருந்தது. ஆனால், அன்றைய தினம் உயர் நீதிமன்றம், தேர்தலுக்கான நிதியை விடுவிப்பதற்கு யாரும் மறுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து தேர்தல் திகதியை முடிவு செய்வதை இன்றைய தினம் வரைக்கும் ஒத்திவைத்தது ஆணைக்குழு.இன்று முற்பகல் தேர்தல்கள் திணைக்களத்தில் கூடிய ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவது என்று முடிவு செய்தது.தபால் மூல வாக்களிப்பு மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 3ஆம் திகதிகளில் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வர்த்தமானி மூலமாக ஆணைக்குழு வெளியிடும்.