கல்முனை பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை உடனடியாக நியமிக்க வேண்டும்-இரா.சாணக்கியன்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை உடனடியாக நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கவில்லை என்றால் அதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிப்பது தொடர்பில்  பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான  தினேஷ் குணவர்தனவிடம்   கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு  அவர் மேலும் கூறுகையில்,

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993ஆம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதேச செயலகம். இதற்கு கணக்காய்வாளர் இல்லை என்று சொல்வதோ அல்லது நியமிக்கப்படவில்லை என்று சொல்லுவதோ ஓர் அலட்சியமான பதிலாகும் என்றார்.

இலங்கையில் பிரதேச செயலகம் ஒன்றுக்கு கணக்காய்வாளர் தேவையில்லை என்று நீங்கள் எவ்வாறு கூறலாம்? இது முற்றுமுழுதாக ஒரு தவறான விடயம். உங்களுடைய பொது நிர்வாக அமைச்சினுடைய செயல்பாடுகள் மிகவும் மோசமாகவுள்ளன என்றார்.

உங்களுடைய பகுதியிலுள்ள பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளர் இல்லை என்றால் அது தேவையில்லாத விடயம் என நீங்கள் கூறுவீர்களா?29 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகம். அங்கு நிதியினை கையாள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நியமிக்கப்படவில்லை.  தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒரு இரவில் இதனை செயற்படுத்துவோம் என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அதேபோன்று கணக்காய்வாளரை நியமிக்காவிட்டால் நிர்வாகத்தினை முடக்குவோம் என்று இராஜாங்க அமைச்சர்களான வியாழேந்திரன், பிள்ளையான் போன்றவர்கள் கூறினார்கள்  . ஆனால் இன்று அவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அதேபோன்று கருணா அம்மானும் இதுகுறித்து பேசினார் ஆனால் இதுவரை எதுவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

எனவே, உடனடியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் அதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார்.


style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">