சிவோன் மக்டோனா எம்பிக்கு ஆதரவாக களமிறங்கிய ஈழத்தமிழ் இளைஞர்கள்!
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் நீண்ட காலமாக குரல்கொடுத்துவரும் மிகமுக்கியமான மூத்த அரசியல்வாதியும், பிரித்தானியாவின் முக்கிய தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமாகிய மதிப்பிற்குரிய சிவோன் மக்டோனா (Hon. Siobhain McDonagh MP) அவர்களின் சேவையை பாராட்டியும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பிரித்தானியா வாழ் ஈழத்தமிழ் செயற்பாட்டாளர்கள் அவருக்கு ஆதரவான பரப்புரைப்பணிகளில் களமிறங்கியுள்ளனர்.
இந்த அடிப்படையில் நேற்றய தினம் (சனிக்கிழமை, 04 மார்ச் 2023) காலை 10 மணிக்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவு வழங்கும் முகமாக துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் வழங்கிவைக்கும் பணி தொழில்கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த பணியில் குறிப்பிடத்தக்க அளவு செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். அதிலும் குறிப்பாக, அண்மையில் சித்திரவதை அனுபவித்து தப்பிவந்த சில தமிழ் இளைஞர்கள் கலந்துகொண்டதுடன், தமது அனுபவங்களை கொளரவ பாராளுமன்ற உறுப்பினருடன் நேரடியாக பகிர்ந்து கொண்டனர். தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படும் சிங்களவர் ஒருவரும் இந்த செயற்பாட்டில் பங்குகொண்டது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பின்போது பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர், தனது ஆதரவு தொடரும் என்று உறுதி செய்ததுடன், தனது அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வழங்கி வைப்பதற்கு முன் வந்த செயற்பாட்டாளர்களுக்கும் நன்றி பாராட்டினார்.
லண்டனின் மிச்சம் மோடன் (Mitcham and Morden) பகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினராக நீண்ட காலமாக கடமையாற்றும் இவர், தமிழீழ மக்களின் மனித உரிமை மற்றும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமன்றி, ஈழத்தமிழர்களின் அகதி அந்தஸ்து கோரிக்கைகளுக்கும் எப்போதும் தனது முழுமையான ஆதரவை வழங்கி வருவதுடன், பலர் நாடுகடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி, அவர்கள் அகதி அந்தஸ்து பெறவும் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.