“உங்களால் முடிந்த அனைத்தையும் முடக்குங்கள்!”
Kumarathasan Karthigesu
“கறுப்பு நாள்” போராட்டம் மெலன்சோன் அழைப்பு!
செவ்வாயன்று நாடு முழுக்க இயல்புநிலை செயலிழக்கும்,பள்ளிகள் முற்றாக மூடப்படும்பொதுப்போக்குவரத்து நகராது,குப்பை அகற்றுவதும் நிறுத்தம்.
ஓய்வூதியச் சீரமைப்புக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றன. ஒரே நாளில் நாட்டை முற்று முழுதாகச்செயலிழக்கச் செய்து காட்டி அரசுக்கு மிரட்டல் விடுக்க பிரான்ஸின் தொழிற்சங்கங்கள் ஆயத்தமாகியுள்ளன.
சகல தொழில் துறைகளையும் சார்ந்த தொழிற்சங்கங்கள் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முழு நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அன்றைய தினத்தைக் “கறுப்பு நாள்” என்று அவை பெயரிட்டுள்ளன. அன்றைய மாபெரும் வேலை நிறுத்தம் அடுத்தவரும் நாட்களுக்கும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபற்றி செவ்வாய்க்கிழமை மாலையில் தொழிற்சங்கங்கள் நாட்டுக்கு அறிவிக்கவுள்ளன. பாரிஸில் பொதுப் போக்குவரத்து முதல் நாளாந்தம் கழிவு அகற்றும் செயற்பாடுகள் வரை அனைத்து பணிகளும் முடக்கப்படவுள்ளன. மின் சக்தி, எரிவாயு, எரிபொருள் துறைப் பணியாளர்கள் தங்களது பணி நிறுத்தத்தை நேற்று வெள்ளிக்கிழமையே தொடக்கி விட்டனர். கல்லூரிகள், உயர் கல்லூரிகள் உட்பட சகல நிலைப் பாடசாலைகளும் செவ்வாய்க்கிழமை முற்று முழுதாக மூடப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
தொழிலாளர் போராட்டங்களை ஆதரித்து – அவர்களின் பின்னால் நின்று – ஆதரவை வழங்கி வருகின்ற மூத்த தீவிர இடது சாரித் தலைவர் ஜோன்-லூக் -மெலன்சோன்(Jean-Luc Mélenchon) பாரிஸில் நேற்று உயர்தர மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், கறுப்பு நாளில் “உங்களால் முடிந்த எல்லாவற்றையும் முடக்குங்கள்”(“Bloquez tout ce que vous pouvez” ) என்று அழைப்பு விடுத்தார்.
ஓய்வூதியச் சீர்திருத்தம் “நவதாராளவாதத்தின்” (neoliberalism) அடையாளமாகும். அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றால், அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும். அந்த வெற்றி ஓய்வூதியச சீர்திருத்தத்துக்கு மட்டுமானது அல்ல. நாம் வெற்றி கொள்ள வேண்டிய ஓர் உலகத்துக்குமானது.
நவதாராளவாத சித்தாந்தம் என்பது உலக அரசியல்-பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற அதிகார வர்க்கத்தின் ஒருவித சிந்தனைக் கட்டமைப்பு. மனிதர்களை எப்போதும் ஒரு வாடிக்கையாளர் (un client or – a customer) என்ற ஒற்றைச் செயற்பாட்டுக்குள்ளேயே அது முடக்கிவைத்திருக்கின்றது.
அதிக உற்பத்திக்காக அதிக காலம் உழைத்தல்(travailler plus pour produire plus) என்பது அந்த சித்தாந்தத்தின் மூடக்கொள்கை.-இவ்வாறு மெலன்சோன் தனது உரையில் காரசாரமாகத் தாக்கியுள்ளார்.
கடந்த அதிபர் தேர்தலில் மூன்றாவது தடவையாக எலிஸே மாளிகைக்கான பந்தயத்தில் இறங்கித் தோல்வியடைந்த போதிலும் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சோசலிஸக் கட்சி உட்பட பிரான்ஸின் இடதுசாரிகளை ஒன்று திரட்டிப் பலமான அரசியல் சக்தியாக மாற்றியவர் மெலன்சோன். அவர் உருவாக்கிய அரசியல் கூட்டணி நாடாளுமன்றத்தில் பலம் பொருந்திய மூன்றாவது பெரும் சக்தியாக உள்ளது.மக்ரோன் அரசுக்குப் பெரும் நெருக்கடி கொடுத்து வருகிறது.