வெளிநாட்டில இருந்து வாறவையோட கதைக்கப் பயமாக் கிடக்கு. உதவி கேக்க வாறம் எண்டு நினைக்கினம்!

வணக்கம் வணக்கம்

அப்ப இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலப்பகுதி 1987 ஆம் ஆண்டு யுத்தம் முடிஞ்சு ஊருக்கு வந்து நானும் தோட்டம் செய்தன். கூடுதலா மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்தன்.அதே கள்ளர் அநேகமா களவெடுப்பினம். சரி சாப்பாட்டுக்கு தானே களவெடுக்கிறாங்கள்.. அப்ப நான் ஒரு நாள் காலம விடிய மரவள்ளி புடுங்குவம் எண்டுபோட்டு தோட்டத்துக்கு போனன் போனால் ஆளை ஆளை தெரியாத சாதுவான இருட்டு பார்த்தால் எங்க தோட்டத்துக்கு பக்கத்தில ஒரு ஆள் கைய உயர்த்தி கொண்டு நிக்குது…பாக்க எனக்கும் பயம் வந்துட்டுது.

ஆமி நிக்கிறானோ எண்டு நானும் கொஞ்சம் தூரத்தில நிக்கிறன் அந்தாளும் நிக்குது. சரி கொஞ்சம் விடியட்டும் என்டு நானும் நிக்கிறன்… அந்தாளும் உயர்த்தின கைய விடேல்லை… எனக்கும் பாக்க பாக்க நாடி ரைப்படிக்குது ,வயிறும் கலக்குது .சரி பலார்பத்தி விடியுது… பாத்தால் எங்கட சிவலிங்கத்தான் கைய உயர்த்திக்கொண்டு நிக்கிறான்.. கால் எல்லாம் பதறிக்கொண்டு நானும் சுத்தி சுத்தி பார்த்தால் ஆமியும் இல்ல ஒரு சாமியும் இல்ல… நான் கிட்ட போனன் சிவத்தான் கண்யாட காட்டி சொன்னான் அங்க ஆமி ஆமி எண்டு.. வேலிக்கரையப்பார்த்தால் ஆமீன்ர ஹெல்மெட் தெரியுது எனக்கும் கலக்கமா போச்சு சலசஞ்சலமா வேர்க்குது..

நானும் கைய உயர்த்திப்போட்டன்.ரெண்டு பேரும் கையை உயர்த்திக்கொண்டு நின்டா ஏலாமல் போச்சுது பாத்தா ஆமி அசையாமல் நிக்கிறான். வடிவா உத்துப் பார்த்தன் எட கடவுளே அதுக்குப்பிறகு தான் ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சம் என்ன நடந்தது தெரியுமே! அது ஆமி இல்ல யுத்தத்தில செத்துப்போன ராணுவத்தின்ர ஹெல்மெட் வேலியில கொழுவிக்கிடந்தது. அத பார்த்து தான் சிவத்தானும் நானும் பயந்து போனம். இப்படி பல அலுவல்கள் இருக்குது அதோட இன்னும் ஒரு விஷயத்தை சொல்ல வேணும். என்னென்டா இந்த வெளிநாடுகளுக்கு போற எங்கட ஆட்கள் சில பேர் லீவுல ஊருக்கு வந்தால் ஊர்ல உள்ள ஆட்களை தங்களிட்ட ஏதோ  உதவி  கேக்க கையேந்திற ஆக்கள் என்டு நினைச்சு அங்க வேலை கஷ்டம், சம்பளம் காணாது அங்க போறத பார்க்க ஊரில இருந்து கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தலாம் என்டு சொல்லிப்போட்டு போறத கண்டிருக்கிறன்.

ஏன் அப்பிடி ஊர்ல இருக்கிற ஆட்கள சீப்பா நினைப்பான். ஊரிலுள்ளவே கையேந்துவினம் எண்டு அப்பிடி நினைக்காமல் சகசமா பழகுங்கோ! ஊரில உள்ளவேக்கும் தன்மானம் இருக்குதுதானே!.மறந்து போகாதேங்கோ!.. நான் ஒன்னும் குறையா சொல்லேல்ல  சரி  இவ்வளவுதான் அடுத்த வாரம் வாறன்.பாய்…பாய்..