இலங்கையில் 5 இலட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்-உலக வங்கி.

2022 ஆம் ஆண்டில் இந்நாட்டில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிபவர்கள் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் உப தலைவர் மார்ட்டின் ரைசர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையின் படி, 2021 மற்றும் 2022 க்கு இடையில் இலங்கையில் வறுமை தோராயமாக 13 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில் நகர்ப்புற வறுமையும் 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மும்மடங்காக அதிகரித்துள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே ஏழைகள் என வகைப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைச் செலவு 65 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில் ஏழைகள் அல்லாதவர்களுக்கு 57 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இலங்கை அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் இருப்பதாகவும், பல ஆண்டுகளாக பொருளாதாரத்தின் தவறான நிர்வாகம், மோசமான நிர்வாகம், மோசமான கொள்கை தேர்வுகள், கொவிட் தொற்றுநோய் மற்றும் ரஷ்ய-உக்ரேனிய மோதல்கள் போன்ற வெளிப்புற தாக்கம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.