வடக்கில் மக்களின் எதிர்ப்பை அடுத்து அகற்றப்பட்ட புத்தர் சிலை.

வடக்கில் இராணுவ முகாமொன்றுக்கு அண்மித்த பௌத்தர்கள் வாழாத பகுதியில் இராணுவத்தினரால் வைக்கப்பட்டபுத்தர் சிலையொன்று,  அப்பிரதேச மக்களின் எதிர்ப்பை அடுத்து அகற்றப்பட்டுள்ளது. முதல் நாள் இரவு வைக்கப்பட்ட இந்தச் சிலை, அடுத்த நாள் பகலே, பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து அகற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை பிரதேச இராணுவ முகாமுக்கு அண்மித்திருக்கும் அரச மர அடிவாரத்திலேயே இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்த நாள் காலை அவதானித்துள்ள பிரதேசவாசிகள், அச்சுவேலி பொலிஸ், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பௌத்தர்கள் எவருமில்லா பிரதேசங்களில் காணப்படும் அரச மரங்களில் இவ்வாறு புத்தர் சிலைகள் வைக்கப்படுவதற்கு பின்னர், அவ்விடத்துக்கு பௌத்த பிக்குமார் வரவழைக்கப்பட்டு, அவர்களை அங்கு தங்கவைத்து, நிரந்தர வதிவிடங்கள் ஏற்படுத்தப்படுவதாலேயே தாங்கள் இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினரை நீக்கி, அப்பிரதேசங்களின் அதிகாரங்களை பிரதேச சபைகள் மாகாண சபைகளுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், விகாரைகளை அண்மித்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாமென்று, மஹாநாயக்க தேரர்களால் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் நிலாவரை பிரதேசத்துக்கு விரைந்து, அங்கிருக்கும் இராணுவ முகாம் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அக்கற்றப்பட்டுள்ளது.