இந்தியாவில் பி.பி.சி அலுவலகத்தில் வருமானவரித்துறை  சோதனை அடக்குமுறை நடவடிக்கை: பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள்.


இந்தியாவிலுள்ள பி.பி.சி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகளால் சோதனை நடாத்தப்பட்டமையை அடக்குமுறை நடவடிக்கை என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வர்ணித்துள்ளனர்.

புதுடில்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகளால் திடீர் சோதனை நடத்தப்பட்டதுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.அண்மையில் பி.பி.சி செய்திச்சேவையானது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையிலான ஆவணப்படமொன்றை பிரிட்டனில் வெளியிட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவிலுள்ள பி.பி.சி அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்திவருவதாக வெளிவிவகார அமைச்சர் டேவிட் ரற்லி தெரிவித்துள்ளார்.அதேவேளை ஜனநாயகக்கட்டமைப்பொன்றில் விமர்சனங்களை அநாவசியமாக ஒடுக்கமுடியாது என்று தொழில்துறை அமைச்சர் ஃபபியன் ஹமில்றன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இது நாட்டின் தலைவர் குறித்த எதிர்மறையான ஆவணப்படம் வெளியிடப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறை நடவடிக்கையேயாகும் என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் ஷெனொன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.