ரஷ்யாவைத் தோற்கடிப்பதே இலக்கு, ஒட்டுமொத்தமாக நசுக்குவதல்ல!
Kumarathasan Karthigesu
பிரான்ஸின் நிலைப்பாடு இது என்கிறார் மக்ரோன்.
உக்ரைனில் ரஷ்யா “தோற்கடிக்கப்பட வேண்டும்” என்பதே பிரான்ஸின் நிலைப்பாடு எனத் தெரிவித்திருக்கும் மக்ரோன், ரஷ்யாவை அதன் மண்ணில்“நசுக்குவது” எமது நோக்கம் அல்ல என்பதை வலியுறுத்தியுள்ளார்.
மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் இருந்து திரும்பும் வழியில் விமானத்தில் வைத்து பிரான்ஸின் லு பிஹாரோ (Le Figaro) ஞாயிறு பத்திரிகைக்கு அவர் செவ்வி வழங்கினார். உக்ரைன் போரைக் காரணம் காட்டி மொஸ்கோவை ஒரேயடியாக நசுக்கி ஒடுக்குவதற்கு மேற்குலகம் முயற்சிப்பதாக நிலவும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பிரான்ஸின் நிலைப்பாடு என்ன என்று மக்ரோனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா “தோற்கடிக்கப்பட வேண்டும்” (defeat) என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறிய மக்ரோன், அதற்குமேலாக ரஷ்யாவை அதன் மண்ணில் தாக்கி நசுக்குவதற்கு(crush) விரும்புவோரை எச்சரிக்கை செய்தார்.”அது ஒருபோதும் பிரான்ஸின் நிலைப்பாடாக இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை “என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்னதாக மியூனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய மக்ரோன், உக்ரைனில் ஒரு நீண்ட கால மோதலுக்குத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்திருந்தார். வெடி மருந்து உற்பத்தியை விரைவுபடுத்துமாறும் அவர் கூட்டணி நாடுகளைக் கேட்டிருந்தார்.
🔵சீனா அமைதித் திட்டம்
இதேவேளை, மியூனிச் மாநாட்டில் உரையாற்றிய சீனாவின் உயர் மட்ட ராஜதந்திரி, உக்ரைனில் நடக்கின்ற மோதலை முதல் முறையாகப் போர் (war) என்று குறிப்பிட்டதுடன் அதனை இப்படியே நீடிக்க விட முடியாது எனத் தெரிவித்தார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் ஒன்றை சீனா எதிர்வரும் 24 ஆம் திகதி வெளியிடும் என்றும் அவர் மாநாட்டில் அறிவித்தார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைச் சீனா முதல் முறையாகப்”போர்” என்று ஏற்றுக் கொண்டிருப்பதையும் அதில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்திருப்பதையும் வரவேற்றுள்ள மேற்குலகத் தலைவர்கள், அதேசமயம் நிதானமாக அதனை அவதானித்து வருகின்றனர் என்றும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் யுத்தம் ஐரோப்பாவுக்கு மட்டுமான ஒரு போர் அல்ல, அது முழு உலகத்துக்குமானது என்பதைச் சீனா ஏற்றுக் கொள்வதையும் அதேசமயம் ரஷ்யாவின் ஆட்சியாளரிடம் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நிலையில் இருக்கின்ற நாடு அது என்பதையும் சீனாவின் அமைதித் திட்ட அறிவிப்புக் காட்டுவதாக சர்வதேச அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பெப்ரவரி 24 ஆம் திகதி அதன் முதலாவது ஆண்டை நிறைவு செய்கிறது. அன்றிலிருந்து புதிய பேரழிவு ஆயுதங்களுடன் போர் அடுத்த கட்டத்துக்குள் நகர இருக்கின்றது. அன்றைய தினத்திலேயே சீனா அதன் அமைதித் திட்டத்தை வெளியிடவிருக்கின்றது.