பாரிஸ் நகரில் எலெக்றிக் ஸ்கூட்டர் பாவனைக்குத் தடை? மக்கள் கருத்தறிய ஏப்ரலில் வாக்கெடுப்பு.
Kumarathasan Karthigesu
மின்னேற்றப்பட்ட எலெக்றிக் ஸ்கூட்டர்களைத் (trottinettes électriques) தொடர்ந்தும் பாவனைக்கு அனுமதிப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்காக பாரிஸ் நகர மக்கள் மத்தியில் விருப்பறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
பாரிஸ் நகரசபை ஏப்ரல் 2ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. நகரின் எல்லைக்குள் வசிக்கின்ற பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தை வாக்கு மூலம் தெரிவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மிக இலகுவானதும் சுயமாக இயக்கிச் செல்லக் கூடியதுமான இந்த ஸ்கூட்டர்கள் சமீப ஆண்டுகளாக நகரில் பிரபலமடைந்திருந்தன. குறுகிய தூரப் பயணங்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகியது. குறிப்பாக இளவயதினரிடம் அது அதிக செல்வாக்குப் பெற்றிருந்தது.
வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல கம்பனிகள் போட்டி போட்டுக் கொண்டுபல்லாயிரக் கணக்கான ஸ்கூட்டர்களை நகரில் வாடகைக் கட்டணத்துடன் ஏட்டிக்குப் போட்டியாக சேவைக்கு விட்டிருந்தன.எலெக்றிக் ஸ்கூட்டர்களின் இந்தத் திடீர் பெருக்கம் பின்னாளில் பாதசாரிகளுக்கும் பொதுப் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தின. உயிரிழப்புகள் ஏற்படும் அளவுக்கு விபத்துகள் நிகழ்ந்தன. உரிய தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தும் அவை கண்ட கண்ட இடங்களில் தரிக்க விடப்பட்டுவந்தன.
பொதுப் போக்குவரத்து ஒழுங்குகள் மீறப்படுகின்றன என்று தெரிவித்து பாரிஸ் நகர சபைக்கு அழுத்தங்கள் அதிகரித்தன. இப்போது அவற்றை வாடகைக்கு விடுகின்ற நிறுவனங்கள் மீது பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கலிபோர்னியாவைச் சேர்ந்த லைம் (Lime), நெதர்லாந்து – பிரான்ஸ் கூட்டு நிறுவனமான டொட் (Dott), ஜேர்மனியின் ரியர் (Tier) ஆகிய மூன்று கம்பனிகளுக்கும் சொந்தமான 15 ஆயிரம் ஸ்கூட்டர்கள் மாத்திரமே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன.
அவற்றின் வேகம் நகரின் சகல பகுதிகளிலும் மணிக்கு 20 கிலோ மீற்றர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியான சில இடங்களில் வேகம் 10 கிலோ மீற்றர்களாக மட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களினதும் அனுமதி மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இந்தக் கட்டத்திலேயே அவற்றைத் தொடர்ந்து சேவைக்கு அனுமதிப்பதா என்பதை அறிவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.