“எங்கள் பிள்ளைகள் உணவுக்கும் நீருக்கும் யுத்தம் புரிகின்ற நிலைமை வரும்!”

Kumarathasan Karthigesu

போர்களில் கவனம் செலுத்தி பூமியைக் காக்கத் தவறினால் எதிர்காலம் சமூகம் ஆபத்தில்! மியூனிச் மாநாட்டில் எச்சரிக்கை.

“பருவநிலை மாறுதல்களைத் தடுப்பதற்காக மிக அவசரமான நடவடிக்கைகளை எடுக்காவிடில் மனித சமூகம் எதிர்காலத்தில் உணவு, தண்ணீர் என்பவற்றுக்காக போர்களில் ஈடுபடுகின்ற நிலைமை உருவாகும்.

” எனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் உணவுக்கும் தண்ணீருக்கும் சண்டைகளில் ஈடுபடுவர் என்பது எவ்வித சந்தேகமும் இன்றி என் மனதில் எழுகின்றது.” ஐரோப்பிய ஆணைக்குழுவின் பருவநிலை விவகாரங்களுக்கான ஆணையாளர் ஃபிரான்ஸ் டிம்மர்மன்ஸ் (Frans Timmermans) மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். ஜேர்மனியின் மியூனிச் நகரில் நடைபெறுகின்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference)  உரையாற்றிய அவர், புவி வெப்பமடைதல் உலகளவில் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாகும். அதன் தாக்கத்தை குறைக்கும் முயற்சிகள் உக்ரைன் போர் போன்ற பிற புவிசார் அரசியல் நெருக்கடிகளால் தடம் புரளக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.

மியூனிச் பாதுகாப்பு உச்சி மாநாடு பொதுவாக உலகத்தின் பாதுகாப்புத் தொடர்பாக விவாதிப்பதற்காகவே நடத்தப்படுகின்றது. அதில் போர்கள் ஆயுதங்கள், ராணுவ விவகாரங்களே, முக்கியத்துவம் பெறுவது வழக்கம்.

ஆனால் இவற்றையெல்லாம் விடக் காலநிலை மாறுதலும் பூமி வெப்பமடைதலும் உலகின் பிரதான பாதுகாப்புப் பிரச்சினைகளாக மாறியுள்ளன. அதுபற்றி ஐரோப்பியப் பருவநிலை ஆணையாளர் தனது உரை மூலம் மாநாட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

பருவநிலை என்பது பாதுகாப்பு. உலகின் அதே பாதுகாப்பு. அதனை அழியாமல் காப்பதிலும் பூகோள அரசியல் வேறுபாடுகள் தாக்கம் செலுத்துகின்றன. பூமியைப் பசுமையாக மாற்றுகின்ற திட்டங்களிலும் பூகோள அரசியல் புகுந்து விளையாடுவதால் பூமி வெப்பமடைதல் தொடர்ந்து நீடிக்கவே போகின்றது. ஆயுத பலம், போர்கள் மற்றும் பாதுகாப்புக் கெடுபிடிகளால் உருவாகிய பூகோள அரசியல் போன்று இப்போது பசுமை மாற்றத்தின் புவிசார் அரசியல் (“Geopolitics of the Green Transition.”) தோன்றியுள்ளது என்பதை ஆணையாளர் தனது உரையில் நினைவூட்டினார்.

பூமிக் கிரகத்தின் சில பகுதிகள் வாழத் தகுதியற்றவையாகிவிட்டன. அதன் விளைவாக எத்தனையோ மில்லியன் அகதிகளை வரவேற்கத் தயாராக இருக்கின்றோமா? உலகின் சில பகுதிகளில் இனி விவசாயம் செய்ய முடியாது. ஆகவே பசி பட்டினி தொற்றுநோய்கள் போன்றவற்றைப் பொறுத்துக்கொள்வோமா? அதற்குத் தயாராக இருக்கிறோமா? யோசித்துப் பாருங்கள்,”- என்றார் ஃபிரான்ஸ் டிம்மர்மன்ஸ்.

பருவநிலை மாற்றத்தால் உருவாகிய கடும் வெப்பம் மற்றும் மழை வீழ்ச்சி குறைந்தமை போன்ற நிலைமைகள் உலகின் சில பகுதிகளில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளன.

காலநிலை மாற்றம் தண்ணீரின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, பல பகுதிகளில் நல்ல தண்ணீர் கிடைப்பதில் பற்றாக்குறை உள்ளது.

காலநிலை மாற்றம் மழைப்பொழிவு முறைகளை மாற்றுகிறது, விவசாயம் மற்றும் மனித நுகர்வுக்கு கிடைக்கும் நீரின் அளவைக் குறைக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் தண்ணீருக்கான மோதல் சம்பவங்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளன.