அதிபர் பைடன் கீவ் நகருக்கு திடீர் விஜயம்!

Kumarathasan Karthigesu

தீவிர பாதுகாப்புடன் வந்தார் போர் விமானங்கள் காவல்!! போலந்துப் பயண நிகழ்ச்சி நிரலின் இடையே உக்ரைன் மண்ணில் தரையிறங்கினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று எதிர்பாராத திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கீவ் நகரில் போய் இறங்கினார். அவரது வருகையால் உக்ரைன் தலைநகரம் பெரும் பரபரப்புக்குள்ளானது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புத் தொடங்கிய பிறகு உக்ரைனுக்கான தனது முதலாவது பயணத்தைப் போரின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் அண்மிக்கின்ற சமயத்தில் மேற்கொண்டிருக்கிறார் பைடன்.

அமெரிக்க அதிபர் கீவ் நகரில் உக்ரைன் அரசுத் தலைவர் ஷெலென்ஸ்கியைச் சந்தித்தார். இன்னும் மேலதிக ஆயுத உதவிகள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று அவர் அப்போது தெரிவித்தார் என அறிவிக்கப்படுகிறது.

கீவ் நகரில் சூரிய ஒளியில் பைடனும் ஷெலென்ஸ்கியும் ஒன்றாக நடந்து செல்வதைப் படங்கள் காட்டுகின்றன. பின்னர் அவர்கள் இருவரும் அதிபர் மாளிகையில் கூட்டாகச் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

இதற்கு முன்னர் கீவ் நகருக்கு ஆறு தடவைகள் வந்திருக்கிறேன். இந்த நகரம் என் இதயத்தின் ஒரு பகுதி என்பதைக் கட்டாயம் சொல்லியே தீரவேண்டும் – என்று பைடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஓராண்டுக்கு முன்பாக உக்ரைனை ஆக்கிரமித்ததன் மூலம் புடின் முற்று முழுதாகத் தவறிழைத்து விட்டார். அவர் பலவீனமான ஓர் உக்ரைனை எதிர்பார்த்தார். மேற்குலகம் இரண்டுபட்டு நிற்கும் என்று தப்புக் கணக்குப் போட்டுத் தவறிழைத்து விட்டார். அவரது வெற்றிகரமான போர் தோல்வியடைந்து விட்டது. -இவ்வாறு பைடன் அங்கு மலும் தெரிவித்தார்.

பைடனின் ரகசிய விஜயம் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட ஓர் அறிக்கையில், “உக்ரைனின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் அமெரிக்காவின் அசைக்க முடியாத மற்றும் நிலையான அர்ப்பணிப்பை” பைடனின் விஜயம் உணர்த்துவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிபர் பைடன் இன்று முதல் மூன்று தினங்கள் போலந்து நாட்டில் விஜயம் செய்வார் என்றே அவரது நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் நடுவிலேயே எதிர்பாராத ரகசியப் பயணமாக அவர் கீவ் நகருக்குச் சென்றிருக்கிறார். பைடனின் வருகையை ஒட்டி போலந்து-உக்ரைன் எல்லைப் பகுதிகளிலும் கீவ் நகரத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பைடனுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் போலந்து – உக்ரைன் வான் பிராந்தியங்களில் நேற்றிரவு முதலே  அமெரிக்க ராணுவ விமானங்களின் நடமாட்டங்கள் அதிகரித்துக் காணப்பட்டன. விமானப் பயணங்களைப் பதிவு செய்கின்ற பிளைற் ரடார் (Flight Radar) இணையத் தளத்தில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">