13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு: சமஷ்டிக்கு இடம்மில்லை: லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவிப்பு.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு முழுமையான ஆதரவை நாம் தெரிவித்ததாலும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியிலும் சமஷ்டி தீர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரும் எதிரணி பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கை அரசமைப்பின் ஓர் அங்கம். அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்குகின்றது. அதேபோல் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் சர்ச்சை நிலை காணப்படுகின்றது. அனைவரும் பேசி இவ்விரு அதிகாரங்கள் தொடர்பில் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால்கூட பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாடு இல்லையேல் அவற்றை அமுல்படுத்த முடியாது. 13 இல் உள்ள ஏனைய விடயங்கள் வழங்கப்படும். அத்துடன், சமஷ்டி தீர்வை தாம் ஆதரிக்கவே மாட்டோம் என ஊடகங்களுக்கு அவர் தெரிவித்தார்.