வீதி விபத்தை அடுத்து பிரபல பிரெஞ்சு நடிகர் தடுப்புக் காவலில்!

Kumarathasan Karthigesu

கொக்கெயின்” அருந்தி விட்டு காரைச் செலுத்தி மோதினார்!!

பிரான்ஸின் மிகப் பிரபலமான நகைச்சுவையாளரும் நடிகரும் இயக்குநருமாகிய பியர் பல்மாட் (Pierre Palmade) பொலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். பெருந் தெரு ஒன்றில் அவர் செலுத்திச் சென்ற கார் மோதியதால் சில வாகனங்கள் விபத்தில் சிக்கி மூவர் படுகாயமடைய நேரிட்ட சம்பவத்தை அடுத்தே நடிகர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

54 வயதான நடிகருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கே தங்கியுள்ள நிலையிலேயே அவருக்குப் பொலீஸ் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் 24 மணி நேரம் விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் பின்னர் 48 மணித்தியாலங்களுக்கு – வெள்ளிக்கிழமை வரை – நீடிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது அவர் போதை மருந்து உட்கொண்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பாரிஸ் புறநகரப் பகுதியாகிய Seine-et-Marne இல் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை இந்த வீதி விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

காரைச் செலுத்திச் சென்ற நடிகர் கொக்கெயின் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததமை பின்னர் நடத்தப்பட்ட பொலீஸ் பரிசோதனயில் தெரியவந்தது.நடிகரது கார் வீதியில் எதிர்ப்பக்கமாக வந்த மற்றொரு காரை முதலில் மோதியது என்று கூறப்படுகிறது. அந்தக் காரில் பயணித்த ஆண் ஒருவரும், ஆறு வயதுக் குழந்தை மற்றும் ஆறு மாதங்கள் கர்ப்பிணியான இளம் பெண் ஆகியோர் உட்பட மூவரும் படுகாயங்களுக்குள்ளாகினர். விபத்தால் நேர்ந்த அதிர்ச்சி காரணமாக அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த ஆறு மாதச் சிசு பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சம்பந்தப்பட்ட வேறு இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேசமயம் நடிகரின் காரில் பயணித்த இரண்டு பேரில் ஒருவர் விபத்தை அடுத்து அந்த இடத்தில் இருந்து தலைமறைவாகியிருந்தார். பின்னர் அவர் பொலீஸாரிடம் சரணடைந்தார்.

நடிகரது நண்பர்களில் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவர் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்று பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடிகரது வீட்டில் பொலீஸார் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.

விபத்து நேர்ந்த நாளன்று பகலில்நடிகர் பியர் பல்மாட் தனது நண்பர்களுடன் பொருள்களை வாங்குவதற்காகக் கடைத் தெரு ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அச்சமயம் தடுப்பூசி ஏற்றப் பயன்படுத்தப்படும் சிறிஞ்சுகளையும் (syringes) அவர் கொள்வனவு செய்தார் என்று வர்த்தகர் ஒருவர் தனது சாட்சியத்தில் தெரிவித்திருக்கிறார்.

பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்ததை அடுத்து நடிகர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட வாய்ப்புள்ளது. அதேசமயம் போதைப் பொருள் உட்கொண்ட நிலையில் எவ்வாறு அவர் வாகனத்தைச் செலுத்தினார்? எதிரே வந்த வாகனத்தை மோதியது எப்படி?

விபத்துக்கு முன்னர் அவர்கள் என்ன நிலையில் காணப்பட்டனர்? போன்ற பல கேள்விகளுக்கு நடிகர் பல்மாட் பதிலளிக்கவேண்டி இருக்கும்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">