தேர்தல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை.

தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நிலவும் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சிகளின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கையெழுத்துடன் பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் நேற்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டலஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவங்ச, தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அதுரலியே ரதன தேரர், டிலான் பெரேரா, உதய கம்மன்பில, நாலக கொடஹேவா, பிரியங்கர ஜயரத்ன, பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த கையொப்பமிடப்பட்ட கடிதம் சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபாலவினால் பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நாடாளுமன்றத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்றம் கூடவிருப்பதால், இன்றும் நாளையும் நாடாளுமன்றம் கூட வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்திருந்தார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் கடும் ஆட்சேபனையை எழுப்ப தேசிய மக்கள் சக்தி கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.