அமெரிக்கா உதவிப் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

அமெரிக்கா உதவிப் பாதுகாப்புச் செயலாளர் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை சந்தித்ததாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இந்து- பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர்  ஜெடிடியா பி றொயல்  தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை இன்று இருவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தனர். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் அந்தோனி நெல்சனும் இந்த சந்திப்பில் பங்கேற்றார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இருவருக்கும் இடையே சுமுகமான கலந்துரையாடல்  இடம்பெற்றது. இதேவேளை அமெரிக்க தூதுக்குழுவினர் இன்று கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்ததுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவையும் சந்தித்தனர்.

இதன்போது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஸ்திரத்தன்மை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.  முன்னதாக அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர்  ஜெடிடியா பி ரோயல் தலைமையில் 29 பேரைக்கொண்ட குழுவினர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று இலங்கை வந்தடைந்தனர். எனினும் அவர்கள் இலங்கைக்கு வருகைத்தந்த சி17 விமானங்கள் நேற்று புதன்கிழமை இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றன.