பழ. நெடுமாறனின் அறிக்கை: ஏதோ சதி உள்ளது: மூத்த வழக்கறிஞர் துரைசாமி பேட்டி.
சட்டத்தில் இடமிருந்தால் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மீது வழக்கு தொடருவோம் என மூத்த வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். பிரபாகரன் தற்போது நலமுடன் இருக்கிறார். அவரின் குடும்பத்தினர் தம்முடன் தொடர்பில் தான் இருக்கின்றனர் என்றும் பிரபாகரன் விரைவில் வெளியே வருவார் எனவும் கூறி அதிர வைத்தார்.
அதுமட்டுமில்லாமல், பிரபாகரன் அனுமதியுடன் இதனை அறிவிக்கிறேன் என்றும் தெரிவித்ததால் உலகெங்கும் பல அதிர்வலைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று வரும் செய்தி முற்றிலும் தவறான வதந்தி, வேண்டும் என்றே சில அரசியல் காரணத்திற்காக பரப்பப்படுகிறது என மூத்த வழக்கறிஞர் துரைசாமி பேட்டியளித்தார். பாஜக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் சென்று வந்த பிறகு பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில், ஏதோ சதி உள்ளது. பழ.நெடுமாறன் திராவிடர் கழகத்திற்கு எதிரானவர், இப்போது, பாஜகவிடம் லாபத்தை எதிர்பார்த்து விலைபோய்விட்டார்.
சட்டத்தில் இடமிருந்தால் பழ.நெடுமாறன் மீது வழக்கு தொடருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் பிரபாகரன் மீது இருந்த 2 வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டது. அவரது இறப்பு சான்றிதழ் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் உள்ளது. அவர் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வது, நல்ல எண்ணத்தில் சொல்லப்படவில்லை என்றும் விரல் ரேகை அடிப்படையில் பிரபாகரன் இறப்பு சான்றிதழ், நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது எனவும் மூத்த வழக்கறிஞர் துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.