யாழ்ப்பாணம் மாநகர சபையின்வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு : ஆர்னோல்ட் பதவி பறிபோகும் நிலை.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ரெலோ கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி முதல்வர் து. ஈசன், புளொட்டைச் சேர்ந்த பி. தர்சானந், சு. சுபாதீஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எஸ். சாந்தரூபனும் கூட்டத்துக்குச் சமூகமளிக்கவில்லை. வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதேவேளை முன்னர் முதல்வராக இருந்த ஆர்னோல்ட் முதல் தடவை சமர்பித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும் முதல்வராக தொடர்ந்தவர்  2020ஆம் ஆண்டு சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையால் அவரது முதல்வர் பதவி பறிபோனது.

அதனை அடுத்து புதிய முதல்வராக சட்டத்தரணி வி. மணிவண்ணன் முதல்வராக பதவியேற்றார். மணிவண்ணனின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முதல் வாசிப்பு தோற்கடிக்கப்பட்ட நிலையில் திருத்தங்களுடன் வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்காது தனது பதவியை இராஜினாம செய்தார்.அதனை அடுத்து மீண்டும் புதிய முதல்வராக ஆர்னோல்ட் தெரிவானார். இந்நிலையில் இன்றைய தினம் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை புதிய முதல்வராக ஆர்னோல்ட் தெரிவானமை சட்டவிரோதமானது என யாழ். மேல் நீதிமன்றில் மாநகர சபை உறுப்பினர் வ. பார்தீபன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் குறித்த வழக்கின் கட்டளை எதிர்வரும் 7 ஆம் திகதி வழங்கப்படும் என திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.