பூங்காப் பகுதியில் தனித்தனி பைகளில் மேலும் உறுப்புகள் கண்டுபிடிப்பு!!
Kumarathasan Karthigesu
பெண்ணை இனங்காண பொலீஸார் தீவிர முயற்சி.
பாரிஸ் 19 பிராந்தியத்தில் இதனால் பெரும் பரபரப்பு.
பாரிஸின் பிரபல புட் சுமோ (Buttes-Chaumont) பூங்காவில் நேற்று மீட்கப்பட்ட ஒரு பெண்ணின் உடற் பாகத்தின் தலை மற்றும் மேலும் சில உறுப்புகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை அதே பூங்காப் பகுதியில் வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
பாரிஸ் நீதி நிர்வாகக் குற்றத் தடுப்புப் பொலீஸ் பிரிவினர் பூங்காப் பணியாளர்களுடன் இணைந்து நடத்திய தேடுதல்களின் போதே பூங்காவுக்கு அருகே பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட ரயில் தண்டவாளப் பகுதியில் பிளாஸ்டிக் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடற்பாகங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன என்று அறிவிக்கப்படுகிறது. பெண்ணின் தலைப் பாகமும் மீட்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட தண்டவாளப் பகுதி பூங்காவில் இருந்து சற்று வெளியே தனித்த – ஒதுக்குப் புறமான – கண்காணிப்புக் குறைந்த-ஓர் இடமாகும் என்று பூங்கா நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்ட பெண் அடையாளம் காணப்படவில்லை. நீல வர்ண ஜீன்ஸ் அணிந்திருக்கிறார். ஜீன்ஸின் வலது பக்கத்தில் தொடைப் பகுதியில் பூக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவர் பெரும்பாலும் ஐரோப்பிய அல்லது வட ஆபிரிக்கப் பூர்வீகம் கொண்ட பெண்ணாக இருக்கவேண்டும் என்று விசாரணையாளர்களது தகவல்களை ஆதாரம் காட்டிப் பரிஷியன் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டுக் குப்பை போடும் பைகளில் பொதி செய்யப்பட்டுள்ளது. அப் பெண் வெளியே எங்காவது கொல்லப்பட்டு உடல் துண்டுகளாகப் பூங்காவுக்குள் எடுத்துவரப்பட்ட மறைக்கப்பட்டதா அல்லது பூங்காவுக்குள் வைத்தே அவர் கொலைசெய்யப்பட்டாரா என்பதை அறிவதற்காகத் தடயவியல் நிபுணர்கள் முயன்று வருகின்றனர்.
பெண்ணின் இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட பாகமே நேற்றைய தினம் கண்டுபிடிக்கப் பட்டது. இன்று தலை மற்றும் ஏனைய உடல் பாகங்கள் கிடைத்துள்ளன.
பூங்கா பணியாளர்கள் பயன்படுத்தும் சேமிப்பு அறை ஒன்றுக்கு அருகிலேயே நேற்றைய தினம் மீட்ட உடற் பாகம் மறைக்கப்பட்டிருந்திருக்கிறது. அதனால் பூங்காப் பணியாளர்களிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
25 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த அந்தப் பூங்காவைக் குற்றவியல் பொலீஸார் குடைந்து தேடுதல் நடத்தி வருகின்றனர். எப்போதும் சன சந்தடி நிறைந்து காணப்படுகின்ற பூங்கா இரண்டாவது நாளாக இன்றும் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது. பாரிஸ் 19 நிர்வாக வட்டகையில் அண்மையில் லோலா என்ற சிறுமியின் உடல் பயணப் பை ஒன்றினுள் மீட்கப்பட்ட சம்பவம் அங்கு வசிப்போர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்போது அதே பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தப் பெண்ணின் மர்மக் கொலை மீண்டும் பீதியை உண்டுபண்ணியுள்ளது.