ஒனேஷ் சுபசிங்க கொலை தொடர்பில் வௌியான மேலதிக தகவல்கள்
ஒபெக்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஒனேஷ் சுபசிங்கவை கொலை செய்ய பிரேசில் நாட்டைச் சேர்ந்த அவரது மனைவியும் உதவியாளரும் சில காலமாகத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஒனேஷ் சுபசிங்கவின் மனைவியின் உதவியாளராக இருந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண், தொழிலில் தாதியாக பணிபுரிபவர் எனவும், அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கணவனைக் கொல்லும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த உதவியாளரை அவரது மனைவி இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இலங்கைக்கு வந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்தப் பெண், ஒனேஷும் அவரது மனைவியும் தங்கியிருந்த வார்ட் பிளேஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு பிரேசில் பெண்களும் அங்கிருந்து ஒனேஷ் சுபசிங்கைக் கொல்ல திட்டம் தீட்டியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஒனேஷ் சுபசிங்கவைக் கொன்று பிரேசிலுக்குத் தப்பிச் செல்வது கடினம் என்பதால் அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு மர்மமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்த தப்பிச் செல்ல குறித்த இரண்டு சந்தேகத்திற்கிடமான பெண்களும் திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து இந்தோனேசிய பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் உயர்மட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் கொல்லப்பட்டதை அடுத்து அவரது மனைவி மற்றும் உதவியாளர் நான்கு வயது மகளுடன் பிரேசிலுக்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.