மற்றொரு பறக்கும் பொருள் கனடாவுக்கு மேலே சுடப்பட்டது!

Kumarathasan Karthigesu

ஒரு வார காலத்தில் மூன்றாவது சம்பவம்.

உலகம் முழுவதையும் உளவு பார்க்கும் சீனாவின் திட்டமா? அமெரிக்கத் தரப்பு சந்தேகம்.

வட அமெரிக்காவுக்கு மேலாக மற்றொரு மர்மப் “பறக்கும் பொருள்” சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை அது கனடா வான் பரப்பில் வைத்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் பணிப்பின் பேரில் அமெரிக்கப் போர் விமானத்தினால் சுடப்பட்டிருக்கிறது. அமெரிக்க – கனடா கூட்டு வான்வெளிப் பாதுகாப்புக் கட்டளைப் பீடமான” நோராட் “North American Aerospace Defense Command – – – NORAD) அந்தப் பறக்கும் பொருளை அலாஸ்கா பகுதியில் முதலில் அடையாளம் கண்டது. சனிக்கிழமை அது கனடாவின் மேற்கே அமெரிக்க எல்லையோரமாக அமைந்துள்ள யுகோன் (Yukon) பகுதிக்கு மேலாக சுமார் நாற்பதாயிரம் அடி உயரத்தில் கனடா வான் பரப்பில் பறந்தது.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ உடனடியாக அமெரிக்க அதிபர் பைடனுடன் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் அதனைச் சுட்டு வீழ்த்தும் உத்தரவை விடுத்துள்ளார். யுகோன் பகுதிக்கு மேலே வைத்து வடஅமெரிக்க வான்வெளிப் பாதுகாப்புக் கட்டளைப் பீடத்தின் படையினர் அதனைச் சுட்டு வீழ்த்தினர் என்றும் அதன் சிதைந்த பாகங்களைக் கனடா படையினர் மீட்டெடுத்துப் பரிசோதிக்கவுள்ளனர் என்றும் ஜஸ்டின் ரூடோ தனது ருவீற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வார காலப் பகுதியில் சீனாவின் உளவு ஊர்தி எனக் கூறப்படும் பலூன் உட்பட மர்மமாகப் பறந்த பொருள்களை அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்திய மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

கடந்த வெள்ளியன்று அமெரிக்காவின் அலாஸ்கா பகுதிக்கு மேலே வைத்து இரண்டாவது பறக்கும் பொருள் சுடப்பட்டது. சிறிய கார் ஒன்றின் அளவில் தோன்றுவதாகக் கூறப்படும் இந்தப் பறக்கும் பொருள்கள் உண்மையில் என்ன என்ற விவரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

கடந்த வாரம் அத்திலாந்திக் கடலின் மேலே அமெரிக்கா சுட்டு வீழ்த்திய சீனாவின் ராட்சத ஆய்வு பலூனின் சிதைவுகளில் உளவுத் தகவல்களை இடைமறிக்கக் கூடிய உணர்வுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன என்று வாஷிங்டன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர். வானிலை ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு சிவில் வான் ஊர்தி பலூனே அது என்று தெரிவித்த பீஜிங் நிர்வாகம், சர்வதேச நியதிகளை மீறி அதனைச் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் செயலைக் கண்டித்திருந்தது.

சீனா அதன் வான்வழி உளவு பார்க்கும் திட்டத்தை(military-linked aerial spy program) உலகெங்கும் நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு விஸ்தரித்துள்ளதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. அதன் ஒர் அறிகுறியே முக்கிய தகவல்களைச் சேகரிக்கின்ற கருவிகள் பொருத்தப்பட்ட அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்களது இந்த ஆகாய அத்துமீறல்கள் என்று அது குறிப்பிடுகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">