நாட்டை முழுமையாக முடக்க மார்ச் 7 முதல் தொடர்ச்சியாக வேலை நிறுத்தம்!
Kumarathasan Karthigesu
பிரான்ஸின் இயக்கத்தை நிறுத்தி அரசுக்குச் சவால்! தொழிற்சங்கங்கள் தயார்.
மக்ரோன் அரசு அதன் ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்டத்தை மார்ச் 7 ஆம் திகதிக்கு முன்னராக மீளப் பெறவேண்டும். இல்லையேல் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி நிறுத்துவதற்கான நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டம் அன்று முதல் ஆரம்பிக்கப்படும். -இவ்வாறு பிரான்ஸின் முக்கிய எட்டு தொழிற்சங்கங்களும் இன்று கூட்டாக எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.
பாரிஸ் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை நான்காவது கட்டமாக வீதிப் பேரணிகள்பல இடம்பெற்றுள்ளன.பாரிஸில் Place de la République இல் இருந்து ஆரம்பித்த பேரணியில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கு கொண்டனர்.அது இன்று மாலை Place de la Nation பகுதியில் முடிவடைந்தது.
நான்காவது கட்டப் போராட்டங்களின் மத்தியில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு பிரான்ஸை முழுமையாக முடக்குகின்ற (mettre la France à l’arrêt) மார்ச் 7 எதிர்ப்பு நடவடிக்கை பற்றிய எச்சரிக்கையை விடுத்தது.
பொதுப் போக்குவரத்து உட்பட சகல தொழிற் துறையினரையும் இந்த ஒரு நாள் முடக்கத்துடன் இணைக்க தொழிற்சங்கங்கள் ஆயத்தமாகின்றன தொழிலாளர் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்காமல் விட்டால் எதிர்ப்பு நடவடிக்கைகள் அன்று முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தங்களாக (grève reconductible) மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக பெப்ரவரி 16 ஆம் திகதி வியாழக்கிழமை அடுத்த ஐந்தாவது கட்டத் தொழிற்சங்க நடவடிக்கை நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளது தெரிந்ததே.
ஓய்வு பெறும் வயதை 62 இல் இருந்து 64 ஆக அதிகரிப்பது உட்பட ஓய்வூதிய முறைமைகளில் பல மாற்றங்களைப் புகுத்துகின்ற புதிய சீர்திருத்தச் சட்ட நகலை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதைக் கடுமையாக எதிர்க்கின்ற கட்சிகள் அதில் ஆயிரக்கணக்கான திருத்தங்களைச் செய்யக் கோரிவருகின்றன. நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் புதிய சீர்திருத்தத்தை எதிர்க்கின்றனர் என்பதைக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. நாட்டின் தொழிலாளர்கள் வயது வேறுபாடின்றி வீதிப் பேரணிகளில் இணைந்து வருகின்றனர்.