இடிபாடுகளுக்குள் தொப்புள் கொடியோடு மீட்ட குழந்தையை தத்தெடுப்பதற்கு பலர் போட்டாபோட்டி!
Kumarathasan Karthigesu
பிரசவித்த மறுகணமே தாய் தந்தை முழுக் குடும்பமும் பலி.
பூகம்ப இடிபாடுகளுக்குள் இருந்து தொப்புள் கொடி அறுத்து மீட்கப்பட்ட அயா(Aya) என்ற பெண் குழந்தையைத்தத்தெடுத்து வளர்ப்பதற்கு ஆயிரக் கணக்கானோர் முன்வந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்களன்று அதிகாலை பெரும் நில நடுக்கம் தாக்கிய போது சிரியாவின் வட மேற்குப் பகுதியில் இடிந்து வீழ்ந்த ஒரு குடியிருப்புக் கட்டடத்தின் உள்ளே அயாவை அவளது தாயார் பிரசவித்துள்ளார். அவர்களது முழுக் குடும்பமும் இடிபாடுகளில் சிக்குண்டனர். அயாவின் தாய், தந்தை சகோதரர்கள் உயிரிழந்தனர். தாய்க்குப் பக்கத்தில் தொப்புள் கொடித் தொடர்போடு கிடந்த அயாவை மட்டும் பணியாளர்களால் மீட்க முடிந்தது. தொப்புள் கொடியை அறுத்து சிசுவைத் தூக்கிக் கொண்டு மீட்புப் பணியாளர் வெளியே ஒருவர் ஓடிவந்த காட்சி காணொலியாக உலகம் எங்கும் பகுரப்பட்டுக் கொடும் துயரைப் பரப்பியது.
சிரிய மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களது பராமரிப்பில் ஆரோக்கியமான நிலையில் இருக்கின்ற அந்தக் குழந்தையைத் தத்தெடுப்பதற்கே உள்நாட்டிலும் உலகெங்கும் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்ற தகவலை உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அயா மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்ட போது ஆங்காங்கே கீறல் காயங்களுடன் அவள் உடல் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.
குழந்தை மூச்சு எடுக்கவில்லை-என்று அவளைப் பராமரித்து வருகின்ற ஹானி மரூஃப் என்ற மருத்துவர் தெரிவித்திருக்கிறார். அயா (Aya) என்ற பெயர் அவளுக்கு மருத்துவர்கள் சூட்டியது. அரபு மொழியில் “அதிசயம்” என்பது அதன் அர்த்தம் ஆகும்.
தத்தெடுத்துப் பராமரிக்க விரும்பி குழந்தையின் விவரங்களைத் தந்துதவுமாறு ஆயிரக்கணக்கானோர் சமூக வலைத் தளங்கள் ஊடாக வேண்டுகோள்களை விடுத்து வருகின்றனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் துருக்கியிலும் சிரியாவிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களது உயிர்களைப் பலிகொண்ட பாரிய நில நடுக்கத்தின் ஓர் அடையாளச் சின்னமாக மாறியிருக்கின்ற குழந்தை அயாவின் எதிர்காலம் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளார் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளிடையே இருந்து இன்னமும் சிறுவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.