இங்கிலாந்தில் 2-ம் உலகப்போர் குண்டு வெடித்தது.
இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிரேட் யார்மவுத் நகரில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கு பள்ளம் தோண்டியபோது 2-ம் உலகப்போரின் போது வீசப்பட்ட 3 அடி நீளம் கொண்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த பகுதி முழுவதையும் சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த போலீசார் 2-ம் உலகப்போர் குண்டை பத்திரமாக செயலிழக்க செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 400 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக குண்டு வெடிப்பால் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே 2-ம் உலகப்போர் குண்டு வெடித்து சிதறும் வீடியோவை போலீசார் டுவிட்டரில் பகிர்ந்தனர்.