நில நடுக்கம் பற்றிய சார்ளி ஹெப்டோவின் கேலிச் சித்திரத்துக்கு பரவலாகக் கண்டனம்!
Kumarathasan Karthigesu
மனிதப் பேரவலம் மீது நையாண்டி எனச் சீற்றம்
துருக்கி – சிரியா நாடுகளை நிலைகுலையச் செய்துள்ள பாரிய நில அதிர்வு அழிவு அனர்த்தம் தொடர்பாக பிரான்ஸின் புகழ்பெற்ற “சார்ளி ஹெப்டோ” (Charlie Hebdo) கேலிச் சித்திர வார இதழ் வெளியிட்ட ஒரு கேலிப் படம் பரவலாகப் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
பத்திரிகையின் கடைசியாக வெளியான பதிப்பில் நில அதிர்வால் தகர்ந்துபோன கட்டடங்களின் இடிபாடுகளைக் காட்டும் ஒரு கிறுக்கல் சித்திரத்தின் கீழே “போர் டாங்கிகளை அனுப்பவேண்டிய தேவை இல்லை”என அர்த்தம் தரும் “Meme Pas besoin d’envoyer des chars” (No need to send tanks) என்று அடிக்குறிப்பிடப்பட்டகருத்துப் படமே வாசகர்கள் உட்படப் பலரையும் கடும் சீற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
சமூக இணைய ஊடகங்களில் அந்தக் கேலிச் சித்திரத்துக்கு எதிராகப் பெரும் எண்ணிக்கையானோர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். “அருவருப்பானது” “அவமானகரமானது”, “குழப்பத்தை உண்டாக்கவல்லது “, “வெறுக்கத்தக்க பேச்சுப் போன்றது”, “மனிதாபிமானத்தை அவமதிப்பது” போன்ற வார்த்தைகளில் அந்தக் கருத்துச் சித்திரத்துக்குப் பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றனர்.
பச்சிளம் குழந்தைகள் உட்படப் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு-லட்சக் கணக்கானோர் வீடுவாசல் இழந்து நிர்க்கதிக்குள்ளாகி இருக்கின்ற சூழ்நிலையில் – இந்த மாபெரும் மனிதப் பேரவலம் மீது முழு உலகின் கவனமும் திசை திரும்பியிருக்கின்ற இந்தச் சமயத்தில்- பொறுப்பும் அனுபவமும் வாய்ந்த ஒரு பத்திரிகை இவ்வாறு மனிதாபிமானத்தைக் கேலிக்குள்ளாக்கிப் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு வலியைக் கொடுக்கும் விதமாக ஒரு சித்திரத்தை வரையவேண்டியது அவசியம் தானா என்று பலரும் கருத்திட்டுக் கேள்வி எழுப்பியுள்ளனர். உலகெங்கும் உள்ள முஸ்லிம் கல்வியியலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரும் அவர்களில் அடங்கியுள்ளனர்.
துருக்கி சமூகத்தினரிடம் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் சார்ளி ஹெப்டோவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரபல கேலிச் சித்திரப் பத்திரிகையாளர்களால் வரையப்படுகின்ற கருத்துச் சித்திரங்களுக்குப் பெயர்பெற்ற பிரான்ஸின் “சார்ளி ஹெப்டோ” வார இதழ் இது போன்ற சர்ச்சைகளில் அடிக்கடிச் சிக்குவது வழமை. 2016 இல் இத்தாலியில் நிகழ்ந்த நில நடுக்கத்தின் போது அதனால் பாதிக்கப்பட்டவர்களைப் பிரபல இத்தாலிய உணவாகிய பாஸ்தாவுடன் (pasta) தொடர்புபடுத்தி அது வெளியிட்ட கருத்தோவியம் அச்சமயம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. முகமது நபியை நையாண்டி செய்யும் விதமான பல சித்திரங்கள் மூலம் உலகெங்கும் இஸ்லாமியர்களது கடும் எதிர்ப்புக்குள்ளாகியிருந்த அப் பத்திரிகை அதற்காகப் பெரும் விலையைச் செலுத்த நேர்ந்தது.
இஸ்லாமிய வெறுப்புவாதத்தைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்படுகின்ற”சார்ளி ஹெப்டோ” பத்திரிகையின் பாரிஸ் ஆசிரிய பீட அலுவலகத்தின் உள்ளே புகுந்த இஸ்லாமிய சகோதரர்களான இரண்டு ஆயுததாரிகள் அங்கு வைத்து மூத்த கேலிச் சித்திரகாரர்கள் உட்பட அதன் ஆசிரியபீடத்தினர் பன்னிருவரைச் சுடுப் படுகொலை செய்தனர். முழு நாட்டையும் அதிர வைத்த அந்தப் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அத் தாக்குதலுக்குப் பின்னர் அதன் ஆசிரிய பீட அலுவலகம் இடம்மாறி மறைவிடங்களில் பலத்த பாதுகாப்புடன் செயற்பட்டு வருகிறது.