ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணமானது தனது சொந்தப் பணம் – கோட்டாபய விடுத்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணமானது தனது சொந்தப் பணம் எனவும், அதனை நாட்டின் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராக இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று  கோட்டை நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்துள்ளது.

எனவே தற்போது நீதிமன்ற காவலில் உள்ள பணத்தை முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீர நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி எவ்வாறு பணம் சம்பாதித்தார் அல்லது அவருக்கு பணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை.

பணமோசடி தடுப்புச் சட்டம் அல்லது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் முறையான விசாரணை நடத்தாமல், அவருக்கு பணத்தை திருப்பித் தருமாறு கோருவதற்கு, எதிர் தரப்பு சார்பில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.