18 இலங்கையருடன் மீன்பிடிப்படகு ஒன்று மொறீஸியஸ் தீவில் ஒதுங்கியது!
Kumarathasan Karthigesu
ஆபிரிக்க நாடொன்றுக்கான பயண வழியில் எரிபொருள் உதவி கேட்டு அங்கு தரிப்பு?
இலங்கையர்களின் ஆபத்தான கடற்பயணங்கள் தொடர்கின்றன. மூன்று குழந்தைகளுடன் 18 பேர் பயணம் செய்த இலங்கைப் படகு ஒன்று கடந்த வெள்ளியன்று மொறீஸியஸ் கடற்பரப்பினுள் பிரவேசித்து உதவி கோரியுள்ளது.
மொறீஸியஸ் தீவின் கரையோரக் காவல்படையினர் படகை வழிமறித்த போது அந்தப் படகின் கப்டன் அவசரமாக ஆயிரம் லீற்றர் எரிபொருள் உதவி கோரினார் என்ற தகவலை அந்நாட்டு செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
அந்தப்படகு இலங்கையில் இருந்து கடந்த டிசெம்பர் 4 ஆம் திகதி புறப்பட்டது. ஆபிரிக்க நாடு ஒன்றை நோக்கிச் செல்லும் வழியில் இடையில் ஜனவரி 15 இல் அது இந்து சமுத்திரத்தின் மற்றொரு தீவாகிய டியாகோ கார்சியாவில் (Diego Garcia) தரித்தது என்ற தகவலைப் படகில் இருந்தோர் தெரிவித்திருக்கின்றனர்.
படகு மொறீஸியஸ் கடற்பரப்பினுள் அவதானிக்கப்பட்டபோது அது ரியூனியன் தீவை நோக்கியே வருகிறது என்று எதிர்பார்க்கப்பட்டது.
படகில் இருப்பவர்களை மீட்பதற்கான ஏற்பாடுகளை ரியூனியன் தீவின் அதிகாரிகள் திட்டமிட்டுவிட்டுக் காத்திருந்தனர். இன்று திங்கட்கிழமை அது ரியூனியன் கடற்பரப்பினுள் பிரவேசிக்கலாம் என்று பொலீஸ் தலைமையகம் மீட்புப் பணியாளர்களுக்குத் தெரிவித்திருந்தது. ஆனால் படகு தற்சமயம் மொறீஸியஸ் தீவின் துறைமுகத்தில் தரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. அது எரிபொருள் நிரப்பிய பிறகு அங்கிருந்து எத்திசை நோக்கிச் செல்லப் போகிறது என்பதைக் கரையோரக் காவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கவுள்ளனர்.
பிரான்ஸின் நிர்வாகத்தின் கீழ்-இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள – ரியூனியன் தீவை நோக்கி இலங்கையர்கள் படகில் வருவது சமீப நாட்களாக அதிகரித்திருப்பது தெரிந்ததே.