12 ஆண்டுகளில் 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் உயர்வு.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைக்கு 2009-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.
இவர்களில் பா.ஜ.க.வின் ரமேஷ் சந்தப்பா ஜிகாஜிநாகி என்பவரது சொத்து மதிப்பே அதிகளவில் அதிகரித்து உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.
அவரது சொத்து மதிப்பு 2009-ம் ஆண்டில் ரூ.1.18 கோடியாக இருந்தது. அது 2014-ம் ஆண்டில் ரூ.8.94 கோடியாகவும் மற்றும் 2019-ம் ஆண்டில் ரூ.50.41 கோடியாகவும் உயர்ந்து உள்ளது. இது ஒட்டுமொத்த அளவில் 4,189 சதவீதம் ஆகும். இதனை அவர் மக்களவை தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாணங்களின் வழியே தெரிய வந்து உள்ளது என அறிக்கை தெரிவித்து உள்ளது.
கர்நாடகாவின் பிஜாப்பூர் தொகுதி எம்.பி.யான இவர், குடிநீர் மற்றும் சுகாதார துறை இணை மந்திரியாக 2016 முதல் 2019 வரை பதவி வகித்து உள்ளார்.
பா.ஜ.க.வின் மற்றொரு கர்நாடகா எம்.பி.யான பி.சி. மோகன் இந்த சொத்து உயர்வு பட்டியலில் 2-வது இடம் பிடித்து உள்ளார். அவரது சொத்து மதிப்பு 2009-ம் ஆண்டில் ரூ.5.37 கோடியாகவும், 10 ஆண்டுகளில் 2019-ம் ஆண்டில் ரூ.75.55 கோடியாகவும் அதிகரித்து உள்ளது. இது 1,306 சதவீதம் ஆகும்.