நிலநடுக்கத்தால் 2600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்.
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 2,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிரியாவில் மட்டும் 968 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும் 3-வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடந்த 1939-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் அதிகம் என கூறப்படுகிறது. மத்திய துருக்கி நகரங்களில் இடிபாடுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் 2600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
வருகிற பிப்ரவரி 12-ந்தேதி வரை துருக்கி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதி அலுவலகங்களில் துருக்கி தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.