உக்ரைனுக்குப் போர் விமானங்களை வழங்க எந்த தடையும் இல்லை – மக்ரோன்.
Kumarathasan Karthigesu
யுத்தத்தை விரிவாக்கும் என்று ஜேர்மனி மறுப்பு
மேற்கின் கனரக டாங்கிகள்:
போரில் நேரடியான தலையீடு என்று மொஸ்கோ கண்டனம்
உக்ரைனுக்குப் போர் விமானங்களை வழங்குவதற்குக் “கொள்கையளவில் எந்தத் தடைகளும் கிடையாது” – என்று அதிபர் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக மேலும் ஆயுத தளபாட உதவுகளை வழங்குமாறு உக்ரைன் அரசு கோரியுள்ளது. குறிப்பாக நீண்ட தூர ஏவுகணைகளையும் போர் விமானங்களையும் விரைவாகத் தந்துதவுமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரான்ஸ் தனது போர் விமானங்களை வழங்குமா என்று அதிபர் மக்ரோனிடம் ஹேக் நகரில் வைத்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்குப் பதிலளித்த அவர், விமானங்களை வழங்குவதற்கு கொள்கையளவில் எந்த வித தடைகளும் கிடையாது என்று தெரிவித்தார். ஆனால் அதன் மூலம் “போரை விரிவாக்கக் கூடாது” என்பது தனது கருத்து என்றும் போர் விமானங்களை வழங்குவது பிரான்ஸின் பாதுகாப்புப் படைகளைப் “பலவீனப்படுத்தாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம், ஜேர்மனி அதன் போர் விமானங்களை ஒருபோதும் உக்ரைனுக்கு வழங்க மாட்டாது என்று சான்சிலர் ஒலாப் சோல்ஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதிநவீன ஆயுதங்களுக்கான இந்த “பந்தயப் போரில்” மேற்கு நாடுகள் இணையக் கூடாது என்றும் சோல்ஸ் கடுமையாக எச்சரித்துள்ளார். நேட்டோ மற்றும் ஜரோப்பியக் கூட்டணி நாடுகளது அழுத்தம் காரணமாக ஜேர்மனி உக்ரைனுக்குத் தனது “லியோபாட்-2”(Leopard 2) என்ற அதி வலுக் கொண்ட போர் டாங்கிகளை வழங்குவதற்கு கடந்த வாரம் இணக்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தீவிர சண்டைகள் மூண்டுள்ளன. வாக்னர் (Wagner) என்ற பிரபல தனியார் கூலிப் படைகளது உதவியுடன் ரஷ்யப் படைகள் அங்கு முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் தினமும் ஆயுத உதவி கோரி அவசர குரல் எழுப்பி வருகிறார்.
அமெரிக்கா, ஜேர்மனி, இங்கிலாந்து உட்பட மேற்குலக நாடுகள் சில உக்ரைனுக்குத் தங்களது கனரகப் போர் டாங்கிகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளன. நூற்றுக் கணக்கான டாங்கிகள் விரைவில் உக்ரைனுக்கு அணிவகுத்துச் செல்லவுள்ளன. இவ்வாறு டாங்கிகளை வழங்குவதை போரில் மேற்கு நாடுகளின் “ஒரு நேரடியான தலையீடாகவே” மொஸ்கோ கருதுகின்றது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆலோசகர் ஒருவர் எச்சரித்திருக்கிறார்.
தரைச் சண்டைகளில் எதிரி நிலைகளுக்குள் விரைந்து முன்னேறுவதற்குப் பெரும் சூட்டாதரவுடன் கவசமாக விளங்கக் கூடிய வலுக் கொண்ட டாங்கிகள் முதல் முறையாக உக்ரைன் படை களுக்குக் கிடைக்கவுள்ளன. அது வரும் வசந்த காலத்தில் போரில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தலாம் என்று போரியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அதேசமயம் சண்டை விமானங்களை வழங்குவது பற்றிய பேச்சுக்களும் தொடங்கியுள்ளன.