ஹோட்டல் மாடியில் இருந்து விழுந்து இளைஞன் பலி.

ஹோட்டல் ஒன்றின் மூன்று மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 26 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஹோட்டலில் காசாளராக பணியாற்றிய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தெனிப்பிட்டிய, வரகாபிட்டிய பகுதியை சேர்ந்த ரித்ம தரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் விசாரணையின் போது, ​​ஹோட்டல் இரவு 11 மணியளவில் மூடப்பட்டதாகவும், நள்ளிரவு 2 மணியளவில் குறித்த இளைஞன் ஹோட்டலுக்கு முன்னால் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் ஹோட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

ஹோட்டல் உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து, அவர் வந்த சில நிமிடங்களில், இளைஞன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னரே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன் விழுந்த இடத்திற்கு அருகில் கவிழ்ந்த நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு வேறு ஒரு நபருடன் தொலைபேசியில் தொடர்ச்சியாக பேசி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.