தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு யாழ் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள்.

தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு யாழ் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.ஊழலை ஒழிக்கும் வரை எந்த தேசமும் சுதந்திரம் அடையாது என்றும், அன்றைய தினம் சுதந்திர தினத்தை புறக்கணித்து கறுப்புக்கொடி ஏற்றுமாறும் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடத்தப்படும் போராட்டங்களில் மக்கள் கலந்து கொள்ள வேண்டுமெனவும், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்தப் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து, போராட்டம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர் தாயகத்தை பொறுத்த வரையில் சிறிலங்கா சுதந்திர தினம் கரிநாளாக கடைபிடிக்கப்பட்டு சிறிலங்காவின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து, மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.இதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி போராட்டத்திற்கான முன்னாயத்த பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.